Published : 31 May 2021 03:46 PM
Last Updated : 31 May 2021 03:46 PM

கேரளாவுக்கு 1,640 மெட்ரிக் டன் தேயிலைத் தூள் விற்பனை; லாபம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என புகார்

கடந்த ஆண்டு கரோனா காலத்தில் கேரள அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள இண்ட்கோ தேயிலைத் தூளைக் கொள்முதல் செய்தது. இதில் கிடைத்த லாபத்தை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என அங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிரதானத் தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் தேயிலை விவசாயத்தைச் சார்ந்துள்ளனர்.

மாவட்டத்தில் 180 தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், அரசுக்குச் சொந்தமாக 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் (இண்ட்கோ) உள்ளன. இதில், 30 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள், தங்கள் தோட்டத்தில் விளையும் பசுந்தேயிலைகளைப் பறித்துத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கான விலையைத் தொழிற்சாலைகள் அங்கத்தினருக்கு அளிக்கின்றன. கடந்தாண்டு கேரள அரசுக்கு இண்ட்கோசர்வ் தேயிலைத் தூளைக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்கியது.

கடந்தாண்டு கேரளாவுக்கு 1,640 மெட்ரிக் டன் தேயிலைத் தூளை இண்ட்கோசர்வ் விற்பனை செய்தது. இதனால் இண்ட்கோசர்வ் கணிசமான லாபம் பெற்றது. ஆனால், லாபத்தில் உறுப்பினர்களுக்குப் பங்கு அளிக்காமல், தேவையற்ற செலவுகள் செய்து பணத்தை நிர்வாகம் விரயம் செய்து வருவதாக அங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன் கூறும்போது, ‘நீலகிரியில் உள்ள சிறு விவசாயிகளுக்குத் தேயிலைதான் வாழ்வாதாரம். மாவட்டத்தில் உள்ள இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலைகளில் 30,000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்தாண்டு கரோனா காலத்தில் கேரளாவுக்கு 1,640 மெட்ரிக் டன் தேயிலைத் தூளை இண்ட்கோசர்வ் விற்பனை செய்தது. இதில் கிடைத்த லாபத்தை அங்கத்தினர்களுக்கு அளிக்கவில்லை.

அதில் கிடைத்த லாபத்தை இண்ட்கோ சர்வ் நிர்வாகம், தொழிற்சாலைகளுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் தேவையில்லாத பணிகளுக்குச் செலவு செய்து விரயம் செய்து வருகிறது. இதனால், உறுப்பினர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

மேலும், அன்றைய காலத்தில் தேயிலை வாரியம் நிர்ணயத்த விலையான கிலோவுக்கு ரூ.20 வழங்காமல், அங்கத்தினர்களுக்கு ரூ.14 மட்டுமே வழங்கியது. அதிலும், பல தொழிற்சாலைகள் உறுப்பினரிடம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு இது வரை பணம் வழங்கவில்லை. எப்பநாடு தேயிலைத் தொழிற்சாலை கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட பசந்தேயிலைக்கான பணம் ரூ.50 லட்சம் இது வரை வழங்கப்படவில்லை.

பி.எஸ்.ராமன்

இந்நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் தொகுதிப்பில் தேயிலைத் தூள் வழங்கப்படவுள்ளது. இதற்கான தேயிலைத் தூளும் இண்ட்கோசர்விலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் லாபத்தில் இருந்தாவது உறுப்பினர்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும்.

தேயிலை வாரியம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்குக் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து வருகிறது. தேயிலை வாரியம் நிர்ணக்கும் விலையை உறுப்பினர்களுக்கு இண்ட்கோ நிர்வாகம் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து இண்ட்கோசர்வ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இண்ட்கோசர்வ் மேலாண்மை இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். புதிய அதிகாரி பொறுப்பேற்றதும், உறுப்பினர்களின் கோரிக்கைகளைத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x