Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM

பாஜக ஆட்சியமைக்க முயல்வதாக வரும் தகவல் உண்மையில்லை: நமச்சிவாயம்

புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சிவாயம் டெல்லி சென்று தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்து புதுச்சேரி திரும்பினார். இதைத்தொடர்ந்து பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் சிக்கல் உள்ளதாக தொடங்கி பல தகவல்கள் வெளியானது.

இதையடுத்து புதுச்சேரியில் அமைச்சரவை அமைவதில் காலதாமதம் தொடர்பாக பாஜக சட்டப்பேரவை தலைவர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “முதல்வர் ரங்கசாமி தலைமையில் மஞ்சள் அட்டைக்கு அரிசிக்கான பணம் ரூ.600 பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.3,000 தரப்பட உள்ளது. முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தியுள்ளோம். இதுபோல் பல திட்டங்கள் தடையில்லாமல் நடக்கிறது. கரோனா தொற்றால் உடல்நிலை சரியில்லாமல் முதல்வர் இருந்ததால் உடனடியாக அமைச்சரவை அமைக்க முடியவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் காலதாமதம் ஏற்பட்டது. வெகுவிரைவில் அமைச்சரவை பதவியேற்பு இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

அமைச்சரவை தொடர்பாக எப்போது அறிவிப்பு வெளியாகும் என்று கேட்டதற்கு, “அமைச்சரவை தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்” என்றார்.

பாஜக ஆட்சியமைக்க முயல் வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, “பாஜக ஆட்சியமைக்க முயல்வதாக வரும் தகவல்கள் குற்றச்சாட்டு தான். உண்மையில்லை” என்று தெரிவித்தார்.

என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி தற்போது எப்படியுள்ளது என்று கேட்டதற்கு, “என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணியானது முதல்வர் ரங்கசாமி தலைமையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x