Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை; மக்களை காப்பதில் அரசியல் செய்ய வேண்டாம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

விருதுநகர்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் இல்லை, மக்களைக் காக்கும் முயற்சியில் மட்டும் அனைவரும் ஈடுபட வேண்டும். இதில், யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விருதுநகரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி மாவட்டந்தோறும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவான் எம்எல்ஏ., மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் `தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அளவிலான உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். அதற்கு இப்போது அவசியம் இல்லை.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 20 நாளில் ஆக்சிஜன் உற்பத்தியை மேம்படுத்திஉள்ளார். ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டைப் போக்கியுள்ளார். மத்திய அரசால் 6 நாட்களுக்கு 1.50 லட்சம் தடுப்பூசி ஒதுக்கப்படுவது போதாது என்பதால் கூடுதலான தடுப்பூசி பெற 3.50 கோடி தடுப்பூசியை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுஉள்ளது. ஜூன் 6-ம் தேதி டெண்டர் நடைபெறும்.

ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட பின் 6 மாதத்துக்குள் தமிழகத்துக்கு 3.50 கோடி தடுப்பூசிகள் வந்துவிடும். மத்திய அரசிடமிருந்தும் 70 லட்சம்தடுப்பூசி கிடைக்கும். கரோனா தொற்றுக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் கடுமையாக உழைக்கிறார். எனவே, மத்திய அளவிலான உயர்மட்டக் குழு எதுவும் தேவையில்லை.

வானதி சீனிவாசனுக்கு நாம்விடுக்கும் வேண்டுகோள், இந்தப்பிரச்சினையில் அரசியல் வேண்டாம். நீங்கள் நேரடியாக டெல்லிக்குச் சென்று தமிழகத்துக்கான தடுப்பூசிகளின் கூடுதல் தேவையைக் கேட்டுப் பெற்றுத்தர உறுதுணையாக இருக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளார். கடந்த 7-ம் தேதி வரை அவர்தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அதுவரை இருந்த ஆக்சிஜனின் ஒரு நாள் கையிருப்பு 250 மெ.டன் மட்டுமே. ஆனால், தேவை 550 மெ.டன் அளவு இருந்தது.

இந்த அரசு பொறுப்பேற்று 20 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு, தற்போது ஒரு நாள் கையிருப்பு 650 மெ.டன். ஆக்சிஜன் உற்பத்தி சரிசெய்யப்பட்டுவிட்டது. எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் இல்லை. மக்களைக் காக்கும் முயற்சியில் மட்டும் அனைவரும் ஈடுபட வேண்டும். இதில், யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x