Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் சார்பில் மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தஎம்.பி., எம்எல்ஏக்கள் சார்பில் மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நேற்று வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாகசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய 3 எம்பிக்கள், 22 எம்எல்ஏக்கள் சார்பில் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கொளத்தூர் தொகுதி சார்பாக முதல்வர் ஸ்டாலின், கடந்த 26-ம் தேதி 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திரு.வி.க.நகர் சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி. சார்பில் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் மொத்தம் 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் ரிப்பன் மாளிகையில் நேற்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் உதயநிதி, தாயகம் கவி, மாநகராட்சி இணைஆணையர் (கல்வி) சங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெ.மேகநாத ரெட்டி, விஷூ மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுவரை மாநகராட்சி சார்பில்2,705 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு 2,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தன்னார்வலர்களின் மூலமாக 1,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. மாநகராட்சியிடம் இதுவரை பெறப்பட்ட 3,080ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்பல்வேறு மருத்துவமனைகளுக்கும், கரோனா சிகிச்சை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x