Last Updated : 27 May, 2021 08:31 PM

 

Published : 27 May 2021 08:31 PM
Last Updated : 27 May 2021 08:31 PM

காரைக்குடி கரோனா மையத்தில் மூச்சுத்திணறலால் அடுத்தடுத்து 9 பேர் இறப்பு: சீரான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என புகார்

காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட கரோனா மையத்தில் சீரான ஆக்சிஜன் கிடைக்காததால் அடுத்தடுத்து 9 பேர் மூச்சுத்திணறலால் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மருத்துவ இணை இயக்குநர் ஆய்வு செய்தனர்.

காரைக்குடி ரயில்வே பீடர் சாலையில் பழைய அரசு மருத்துவமனையும், சூரக்குடி சாலையில் புதிய மருத்துவமனையும் செயல்படுகின்றன. இரண்டு இடங்களிலும் கரோனா வார்டுகளில் 116 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் 120 படுக்கைகள் இருந்தன. படுக்கைகள் நிரம்பியதால், கரோனா அறிகுறியுடன் வருவோருக்கு வராண்டாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படுக்கை இல்லையெனவும் புகார் எழுந்தது.

இதையடுத்து புதிய மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டன.

இந்த மையத்தை புதன்கிழமை ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். இதையடுத்து நேற்றுமுன்தினமே பழைய மருத்துவமனை, புதிய மருத்துவமனையில் இருந்து கரோனா தொற்று மற்றும் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவில் இருந்து இன்று பகல் வரை 7 பேர் மூச்சுதிணறலால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து ஆக்சிஜன் சீராக கிடைக்காதலாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, கோட்டாட்சியர் சுரேந்திரன், மருத்துவ இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன் ஆகியோர் மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், ‘நோயாளிகளை அவசர, அவசரமாக புதிய கட்டிடத்திற்கு மாற்றியதாலும், ஆக்சிஜன் சீராக கிடைக்காததாலும் தான் இறப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறையால் மருத்து, மாத்திரைகள் முறையாக வழங்கவில்லை. குடிநீர் வசதியும் இல்லை,’ என்று கூறினர்.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறுகையில், ‘‘ மூன்று பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஏற்கனவே 110 பேர் சிகிச்சையில் இருந்தனர். தற்போது தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிகளவில் இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். இதனால் ஆக்சிஜன் படுக்கைகளில் 179 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 230 டன் திரவ ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை,’’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x