Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 11 கோயில்களுக்கு உலக பாரம்பரிய நினைவுச் சின்ன பட்டியலில் இடம்: யுனெஸ்கோ இணையதள தகவலால் மக்கள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் என 45 கலைச் சின்னங்களை தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இவற்றில் குடவரை சிற்பங்கள் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 புராதன கோயில்கள் மற்றும் 31 பாரம்பரிய கலைச் சின்னங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், ஏற்கெனவே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுரகேஸ்வரர் கோயில், கைலாசநாதர், வைகுண்ட பெருமாள், முக்தீஸ்வரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர் கோயில்கள் மற்றும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் உள்ளிட்ட 11 கோயில்கள், உலகபாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரிப்பதற்கான யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதன்மூலம், காஞ்சிபுரம் கோயில்கள் சர்வதேச ஆன்மிக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும்போது, “யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெறுவதற்காக, நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கலைச் சின்னங்கள் மற்றும்கோயில்கள் என 48 பாரம்பரியகலைச் சின்னங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் உள்ள ரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மேற்கண்ட 11 கோயில்கள்யுனெஸ்கோவின் இணையதளத்தில் வெளியாகியுள்ள தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதரை வைத்துள்ள வரதராஜ பெருமாள் கோயில் உட்பட நகரில் உள்ள மேற்கண்டகோயில்களை மேம்படுத்துவதற்கு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும். இதனால், காஞ்சியில் பல்வேறுகட்டமைப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x