Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றச்சாட்டு: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை

சென்னை

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர் அத்துமீறியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கே.கே. நகர் பத்ம சேஷாத்ரி பாலபவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றுபவர் ராஜகோபாலன். அவர் மீது மாணவி ஒருவர் எழுப்பிய பாலியல் புகாரைமுன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.வகுப்பில் அவர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைக்கும் அளவுக்கு சென்றதாகவும், இதுகுறித்து துறைத்தலைவரிடம் புகார் அளித்தும்நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போதும் எல்லை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுகுறித்து அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணைஆணையர் ஜெயலட்சுமி அந்த பள்ளிக்கு நேற்று மதியம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஆசிரியர் ராஜகோபாலனை ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஆசிரியர் பணி இடைநீக்கம்

இதற்கிடையில், பள்ளியில் இருந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி நிர்வாகம் விளக்கம்

கே.கே. நகர் பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரா வெளியிட்ட விளக்கத்தில், ‘‘மாணவர்களின் நலனை உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக பாதிக்கிற எந்த ஒரு செயலையும் பள்ளி நிர்வாகம் சகித்துக் கொள்ளாது. சமூகஊடகங்களில் வெளியாகியிருப்பது போன்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை நாங்களே தாமாக முன்வந்து நியாயமாக, வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்போம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார். அதில் உண்மைத் தன்மை இருக்கும் பட்சத்தில், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி

இதற்கிடையே, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிஅனிதா பள்ளி நிர்வாகிகளிடம் நேற்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை, காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்ததாகவும், இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அனிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x