Published : 20 Dec 2015 10:01 AM
Last Updated : 20 Dec 2015 10:01 AM

டிசம்பர் மாத மின் கட்டணத்துக்கு மட்டுமே சலுகை: நவம்பருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் தகவல்

‘வெள்ள பாதிப்பு காரணமாக, குடியிருப்புகளில் டிசம்பரில் கணக்கெடுக்கப்பட்ட மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மட்டுமே ஜனவரி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத கட்டணங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்’ என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்புகளுக்கான மின் கட்டணங்களை செலுத்த ஜனவரி வரை அவகாசம் அளிப்பதாக அரசு அறிவித்தது. இந்நிலையில், குடியிருப்புகளுக்கான நவம்பர் மாத மின் கட்டணத்தை செலுத்துவோரிடம், மின்சார வாரியம் அபராதம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

நவம்பர் மாதம் முதலே கனமழை பெய்து வருகிறது. அதனால், மின்கட்டணங்களை ஜனவரி மாதம் வரை செலுத்த அவகாசம் அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், நவம்பர் மாதம் எடுக்கப் பட்ட மின் அளவீடுகளுக்கு தற்போது கட்டணம் செலுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் கூறுகிறது. அரசின் அறிவிப்பை நம்பி மின்கட்டணம் செலுத்தாமல் இருந்தவர்கள், அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட மின்சார வாரிய செயற் பொறியாளர்கள் கூறியதாவது: வெள்ள பாதிப்பு காரணமாக மின் கட்டணங்கள் செலுத்த ஜனவரி மாதம் வரை அரசு அவகாசம் அளித்துள்ளது. ஆனால், இந்த அறி விப்பு டிசம்பர் மாத மின் கட்டணங் களுக்கு மட்டுமே பொருந்தும். நவம்பர் மாத மின் கட்டணங்கள், மழைக்கு முன்பே வீடுகளில் அளவீடு செய்து நிர்ணயிக்கப்பட்டது.

குடியிருப்புகளுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதே தவிர, வணிக நிறுவனங்க ளுக்கு இல்லை. அதனால், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் வழக்கம் போல் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x