Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

கரோனா தடுப்பு விதிமீறல்: மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தளத்துக்கு ‘சீல்’

தனியார் தொலைக்காட்சி குழுமம் சார்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும்.

அந்த வகையில், மலையாள மொழியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்வுக்கான படப்பிடிப்பு, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இச்சூழலில், அந்நிகழ்ச்சியின் தொழில்நுட்பக் கலைஞர்கள் 6 பேருக்கு, கடந்த வாரம் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, வரும் 31-ம்தேதிவரை சின்னத்திரை மற்றும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

வருவாய், காவல் துறை

இந்நிலையில் பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி, பூந்தமல்லி வட்டாட்சியர் சங்கர், பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுதர்சன் உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று, அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் கரோனா தடுப்பு விதிகளை மீறி, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வந்தது தெரியவந்தது. ஆகவே, படப்பிடிப்பு தளத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பிறகு படப்பிடிப்பு தளத்தில் இருந்த 7 நடிகர்கள், நடிகைகளை கரோனா கவச உடைகளுடன் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றியதோடு, படப்பிடிப்பில் ஈடுபட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 60-க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் வெளியேற்றினர்.தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தின் 3 நுழைவுவாயில்களையும் மூடி ’சீல்’ வைத்தனர்.

பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகளை நேற்று இ-பாஸ் சகிதம் நேற்று கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். படப்பிடிப்பு நடந்த தனியார் பிலிம் சிட்டியையும் மூடி சீல் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x