Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

அமைச்சர்கள் பட்டியலை முதல்வர் முடிவு செய்வார்: புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வழங்கப்பட்ட கரோணா நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக் கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘சிஐஐ கூட்டமைப்பு சார்பில் கரோனாவுக்குதேவையான மருந்துகள், கையுறைகள், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் பாராட்டுக்கள். இதுபோல் பலரும் கொடுக்க முன்வரும்போது கரோனாவில் இருந்து மக்களை அதிகளவில் பாதுகாக்க முடியும்.

தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கையால் சிங்கப்பூரில் இருந்து ராஜேஷ் என்பவர் எனது டிவிட்டர் பக்கத்தை பார்த்து, இங்கு தொடர்பு கொண்டு ஆக்சிஜன் ஃப்லோ மீட்டர் அனுப்பியுள்ளார்.

கதிர்காமம் மருத்துவமனையில் 2-வது மாடியில் புதிதாக 48 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். மக்களின் பங்களிப்போடு கரோனாவை எதிர்த்து போராடுவதில் மிக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 31 பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. ஓரிரு நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி விழா தொடங்க இருக்கிறோம். தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் முழுமையான பாதுகாப்பாக இருக்கும்.

புதுச்சேரி முதல்வர் கரோனா தொற்றில் இருந்து உடல்நலம் தேறி வந்துள்ளார். அவர் முழுமையாக குணமடைய வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர்கள் பட்டியல் எதுவும் என்னிடம் வரவில்லை. அது அரசாங்க ரீதியிலான முடிவுகள். அமைச்சர்கள் பட்டியல் குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார்.

இவ்வாறு துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.

‘நேரு வீதி பெரிய மார்க்கெட் பிரச்சினை தீர்ந்தது’

“நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட் வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக என்னிடம் வந்து மனு அளித்தனர். புதிய இடத்துக்கு எங்களால் கடைகளை மாற்றம் செய்ய முடியாது, அங்கு தேவையான வசதிகள் இல்லை என்று கூறினர். நான் ஆட்சியரை தொடர்பு கொண்டு, அதற்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தேன். அவரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதே இடத்திலேயே தனிமனித இடைவெளியுடனும், கரோனா விதிமுறைகளை பின்பற்றியும் கடைகள் இயங்க ஏற்பாடு செய்துள்ளார்’‘ என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், "பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தோம். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை எடுத்துக் கூறினோம். ஆளுநர் மீண்டும் பெரிய மார்க்கெட் பகுதியில் கடைகளை உரிய சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதித்துள்ளார். அதனால், பெரிய மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் இயங்கும்’‘ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x