Published : 19 May 2021 03:15 AM
Last Updated : 19 May 2021 03:15 AM

பொதுமக்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்து பேசும் அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சார் ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்டோர்.

ஆற்காடு

பொதுமக்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக் கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அரசின் உத்தரவுப்படி மகிழ்வூட்டும் சித்த மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று தொடங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா வரவேற்றார். ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம் பகவத், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சித்த மருத்துவ பிரிவை தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் அரசு அதிகாரிகள் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே கரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறவேண்டும். ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.

அதேபோல், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை’’ என தெரிவித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘தமிழக முதல்வர் பொறுப்பேற்று 11 நாட்கள்தான் ஆகிறது. கடந்த 3-ம் தேதி முதல் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கரோனா தொற்றை எப்படி கட்டுப்படுத்துவது மற்றும் பொது மக்களை பாதுகாப்பது என ஆலோசனை செய்து இன்றைக்கு இந்தியாவி லேயே சிறப்பான முதல்வராக செயல்பட்டு வருகிறார். சிறந்த மருத்துவர்களையும் அனைத்துக் கட்சியினரை கொண்ட குழுவை அமைத்து அரசியல் பேதம் பார்க்காமல் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த ஆட்சி மக்களாட்சியாக செயல்படுகிறது. மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. இன்னும் பயத்துடனே இருக்கிறார்கள். பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் மாவட்டந்தோறும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப் பட்டுள்ளது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி, சித்த மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுகன்யா, சித்த மருத்துவ அலுவலர்கள் டாக்டர் பிரசன்னா தேவி, டாக்டர் அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x