Last Updated : 18 May, 2021 01:28 PM

 

Published : 18 May 2021 01:28 PM
Last Updated : 18 May 2021 01:28 PM

தூய்மைப் பணியாளர்களுக்கு தரமான முகக்கவசம் வழங்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை

தூய்மைப் பணியாளர்களுக்குத் தரமான முகக்கவசம் வழங்காவிட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூரில் இன்று (மே 18) நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

"முகக்கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். வெளியே சென்று திரும்புவோர் கட்டாயம் குளித்துவிட்டுதான் வீட்டுக்குள் செல்ல வேண்டும். இதெல்லாம் கரோனா தடுப்பில் தற்காலிகமானதுதான்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும்தான் நிரந்தரத் தீர்வு. எனவே, காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தமிழகத்தில் 70 சதவீதம் தடுப்பூசி போட்டுவிட்டாலே கரோனாவைக் கட்டுப்படுத்திவிடலாம். இரண்டாவது அலையானது குறிப்பாக இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்குகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அடுத்த 2 வேளையும் இலகுவான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள்.

தினசரி 18 மணி நேரம் கரோனா தடுப்புப் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, துப்புரவுப் பணியாளர்களைக் காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு. அவர்களுக்குத் தரமான முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்கள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கோட்டாட்சியர் டெய்சிகுமார், சுகாதாரத் துணை இயக்குநர் விஜயகுமார், வட்டாட்சியர் பொன்மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x