Last Updated : 17 May, 2021 03:13 AM

 

Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

முழு ஊரடங்கு அமலாக்கத்தால் - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.300 கோடி ஜவுளி தேக்கம்: கூலிக்கு நெசவு செய்வோர், தொழிலாளர்கள் வேலையிழப்பு

கரோனா தொற்றுப் பரவலால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவுகளால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.300 கோடி மதிப்பிலான ஜவுளி தேக்கமடைந்து விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறி தொழில் விவசாயத்துக்கு அடுத்து நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய தொழிலாக உள்ளது. தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் வரை செயல்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வரை இவ்விரு மாவட்டங்களிலும் இத்தொழிலால் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் தற்போது கரோனா பரவலின் 2-ம் அலை தீவிரமாக உள்ளது. இதனால் அனைத்துவர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் முடங்கி வருகின்றன.வடமாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி தேக்கமடைந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் அதிகளவில் தேக்கமடைந்துள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக கோவை, திருப்பூர்மாவட்டங்களில் விசைத்தறி கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் கிரே காடா காட்டன் துணி மகாராஷ்டிரா, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி,மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துணிகள் ஊரடங்கு உத்தரவுகளால் விற்பனை செய்ய முடியாமலும், அனுப்பி வைக்க முடியாமலும் முடங்கியுள்ளன. வடமாநில வியாபாரிகள் பலர் ஜவுளி வாங்குவதை முழுமையாக நிறுத்திவிட்டனர். ஒருசில வியாபாரிகள் குறைந்த விலைக்கு துணியை கேட்கின்றனர். வியாபாரம் நடைபெற்று பல வாரங்கள் ஆகிவிட்டதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தேக்கம் காரணமாக உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளனர். விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் பாவு, நூல் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி தொழிலை நம்பி வாழும் கூலிக்கு நெசவு செய்வோர் மற்றும் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். விசைத்தறி கூடங்கள் முடங்கி வருகின்றன.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சண்முகம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: எங்களுக்கு துணி வியாபாரம் நடைபெற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. வடமாநிலங்களில் இருந்து வர வேண்டிய பணமும் வரவில்லை. வடமாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளதால் வர்த்தகமும் நடைபெறுவதில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன. இரு மாவட்டங்களில் மட்டும் எங்களது துறை சார்ந்து ரூ.300 கோடி மதிப்பிலான உற்பத்தி செய்யப்பட்ட துணி தேக்கமடைந்துள்ளது. கடந்த முறை ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள எங்களுக்கு 8 மாதங்கள் பிடித்தன. தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள எத்தனை நாட்களாகும் என தெரியவில்லை.

தற்போது உள்ள சூழலில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதால் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டோம். விசைத்தறி தொழிலை பொறுத்தவரை ஒருவர் செயல்பட்டால், அதை சார்ந்த அனைவரும் செயல்பட்டாக வேண்டும். இதனால் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளது. அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதால், பெரும்பாலான இடங்களில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளோம். உற்பத்தி நிறுத்தத்தால் கூலிக்கு நெசவு செய்வோருக்கு வேலை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்து வரும் 15 நாட்கள் கழித்தே எதுவும் சொல்லக்கூடிய நிலையில் உள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் அரசுதான் உதவ வேண்டிய நிலை வரும், 'என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x