Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு: கனிமொழி எம்.பி. உறுதி

கயத்தாறு அருகே கலப்பப்பட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த மாரிமுத்து என்பவரின் குடும்பத்துக்கு பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை கனிமொழி எம்.பி. வழங்கினார். அருகில் அமைச்சர் கீதாஜீவன்.

தூத்துக்குடி/கோவில்பட்டி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி கிராமத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தனர். ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறும்போது, “கிராமங்கள் தோறும் நடத்தப்படும் முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் தவறாக கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என, அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை ஆணையம் இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையை பார்த்துவிட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் களது கல்வித்தகுதிக்கு ஏற்ற முறையான வேலைவாய்ப்பு வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும்” என்றார்.

மீனவர்களை மீட்க நடவடிக்கை

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “ கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு நாகப் பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவற்றில் இரண்டு படகுகள் கரை திரும்பி விட்டன. ஒரு படகு மட்டும் கரை திரும்பாமல் கடலுக்குள் கவிழ்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதில் சென்ற மீனவர்களை மீட்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் எங்கு கரையேறினாலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நிதி உதவி வழங்கல்

வைப்பாறு அருகே உள்ள ராமபுரத்தைச் சேர்ந்த கோட்டை பாண்டி(55), வைப்பாறு தெற்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ்(30) ஆகியோர் கடந்த 13-ம் தேதி மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதேபோல் கடந்த 9-ம் தேதி கயத்தாறு அருகே உள்ள கலப்பப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(40), கடந்த 11-ம் தேதி முடுக்கலான்குளத்தைச் சேர்ந்த அழகுமுருகராஜ்(24) ஆகியோர் மின்னல் தாக்கி மரணமடைந்தனர். இவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி., மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவியாக தலா ரூ.4 லட்சம் வழங்கினார். அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஜி.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x