Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம், அருண்மொழித்தேவன் அருகே குறுவை சாகுபடிக்காக பம்புசெட் மூலம் நீர்பாய்ச்சி தயார்படுத்தப்படும் வயல்.

திருச்சி

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் 8 ஆண்டு களுக்குப் பிறகு 2-வது முறையாக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதால் டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை பருவம் என்பது விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் வருமானம் தரும் நெல் சாகுபடி பருவமாகும். இதற்கென ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இதே காலத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்ததால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு ஏறத்தாழ 97 அடி உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ம் திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதனால், டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 35 ஆயிரம் ஹெக்டேர் மற்றும் திருச்சி, கடலூர் மாவட்டங்களில் 24 ஆயிரம் ஹெக்டேர் என ஏறத்தாழ 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட வசதியாக காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அணைகள், ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்துப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

சாகுபடி பணிகளை முழுஅளவில் மேற்கொள்ள வசதியாக தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள், கடன் உதவி உள்ளிட்டவற்றை குறைவின்றி வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூரில் அமைச்சர் தகவல்

இதற்கிடையே, வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: மேட்டூர் அணையில் 92 அடி தண்ணீர் இருந்தாலே பாசனத்துக்காக திறக்கலாம். ஆனால், தற்போது 97 அடி தண்ணீர் உள்ளது. எனவே தென்மேற்கு பருவமழை மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறப்பது குறித்து நாளை (இன்று) தஞ்சாவூரில் 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x