Published : 16 May 2021 03:16 AM
Last Updated : 16 May 2021 03:16 AM

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த விசிக பொருளாளர் முகமது யூசுப் காலமானார்

சென்னை

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த விசிக பொருளாளர் முகமது யூசுப் (54) சென்னையில் காலமானார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கரோனா தடுப்பூசி முதல் தவணையை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு, அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

4 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர், பின்னர் அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் பின்னர், சென்னைமண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.

விசிக தலைவர் திருமாவளவனிடம் நெருக்கமாக இருக்கும் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த முகமது யூசுப், கடந்த 2007-ம் ஆண்டு முதல் விசிகவின் பொருளாளராக இருந்து வந்தார்.

முகமது யூசுப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைப் பொதுச்செயலாளர் முகமது ஷிப்லி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x