Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகளை வகுக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வுக் கூட்டம், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

ஆலந்தூர்

கரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில்முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகளை வகுத்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து தொழில் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ செய்யுமாறும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வுக் கூட்டம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிண்டியிலுள்ள சிட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 122 சிட்கோ தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு பெருந்தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தி அதைத் தவறாமல் கடைபிடிக்க செய்ய வேண்டும்.

மேலும் இத்தொழிற்பேட்டைகளில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் வகையில் தொழிற்பேட்டைகள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து பணியாளர்களையும் பெருந்தொற்றிலிருந்து காக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய உத்திகளை வகுத்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து தொழில் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழும் வகையில் செயல்படுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையர் சு.சிவராசு, தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.கஜலெட்சுமி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் கு. இராசாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x