Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

28 ஆண்டுகளாக பட்டாக்களை பெற்று காத்திருக்கும் - பயனாளிகளுக்கு வீட்டு மனைகளை 3 மாதத்துக்குள் அளந்து வழங்க வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் இராஜநகரம் காலனியில் சர்வே எண் 107/1 மற்றும் 108/8 வரை உள்ள இடத்தை 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி 61 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆதிதிராவிட நலத் துறையின் வாயிலாக வழங்கப்பட்டது.

மேலும், 2002-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறையின் வாயிலாக 39 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 100 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலத்தை அளந்து காட்டும்படி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்களை அளித்து கேட்டுக்கொண்டோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வீட்டுமனைகளை அளந்து காட்டும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

மாநில மனித உரிமை ஆணையம் மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டது. விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. விசாரணையின் முடிவில் மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

1994 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட பட்டாவில் கூறப்பட்டுள்ள வீட்டுமனைகளை 3 மாதத்துக்குள் பயனாளிகளுக்கு அளந்து வழங்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாளர் உத்தரவிட வேண்டும். இத்தனை ஆண்டுகள்பயனாளிகளை அலைக்கழித்ததால் 100 பயனாளிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x