Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அமைச்சர்கள் ஆய்வு

பெரும்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் உள்ளிட்டோர்.

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வரும் தனியார் தொழிற்சாலைகளில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலையில் இயங்கிவரும் ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட் மற்றும் ப்ராக்ஸ் ஏர் ஆகிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் தங்கு தடையின்றி உற்பத்தி, விநியோகத்தை மேற்கொள்ள தேவையான அனைத்துஏற்பாடுகளையும் செய்ய தொழிற்சாலை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 160 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரித்து வந்த நிலையில், அரசின் வேண்டுகோளை ஏற்று, உற்பத்தி அளவை 20 மெட்ரிக் டன் கூட்டி, 180 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல் ப்ராக்ஸ் ஏர்நிறுவன தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 80 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை உயர்த்ததேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம்தென்னரசு செய்தியாளரிடம் கூறியதாவது: ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஆய்வு செய்தோம். ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்தும், அதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தோம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருப்பு குறைந்துவிடாமல் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள பெல் தொழிற்சாலை உள்ளிட்ட ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்புகள் இருந்தால், உடனடியாக அந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்தெந்த நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் உற்பத்தி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது சிப்காட்மேலாண்மை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் தெ.சண்முகப்பிரியா, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மா.நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x