Published : 06 Mar 2014 04:07 PM
Last Updated : 06 Mar 2014 04:07 PM

ராஜபக்‌சேவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவையா?- நாகையில் ஜெயலலிதா ஆவேசப் பேச்சு

"இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவை தானா?" என்று கேள்வி எழுப்பினார், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா.

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் கே.கோபாலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது:

"பிறரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள். வாழ வைத்த தமிழர்களை வஞ்சித்த அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. மத்திய காங்கிரஸ் அரசின் வஞ்சகச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.

காவிரி நதிநீர்ப் பிரச்சினை

டெல்டா பகுதி மக்களின் உயிர்நாடியாக விளங்குவது காவிரி நதிநீர். இந்தக் காவிரி நதிநீரில் நமக்குள்ள பங்கை தர கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அதன் இறுதி ஆணை 2007-ஆம் ஆண்டே

வெளியிடப்பட்டது. அப்போது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் இருந்தது. தமிழ்நாட்டில் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. 2011-ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதலமைச்சர் பொறுப்பில் மு.கருணாநிதி இருந்தார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திரு. கருணாநிதி, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டாரா? இல்லையே. இந்தக் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை வெளியிட மத்திய அரசு தான் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இல்லையே! இதற்காகவா 2004-ஆம் ஆண்டும் 2009-ஆம் ஆண்டும் காங்கிரசுக்கும், தி.மு.க-வுக்கும் தமிழக மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள்? வாக்களித்த மக்களுக்கு செலுத்திய நன்றி இது

தானா? இதைவிட துரோகம் வேறு என்னவாக இருக்க முடியும்? காவிரிப் பிரச்சனையில் உங்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வுக்கு வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்.

நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூலமாக போராடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தேன். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய

அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்; காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் நமக்குரிய தண்ணீரை கர்நாடகா வழங்குவது உறுதிபடுத்தப்படும்.

ஆனால் இவற்றை அமைக்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. எனவே எனது உத்தரவின் பேரில் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி அமையும் போது, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் என்ற உறுதியை நான் உங்களுக்கு இந்த நேரத்தில் அளிக்கிறேன்.

காவிரிப் பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் நெற் களஞ்சியத்தை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்ட அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

மீத்தேன் வாயு உற்பத்திப் பணி

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆய்வு செய்து மீத்தேன் வாயுவினை உற்பத்தி செய்யும் பணியினை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தினை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு 2010-ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கியது.

இந்தப் பணியினை மேற்கொள்ள ஏதுவாக பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை மேற்படி நிறுவனத்திற்கு வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனைப் பரிசீலித்த முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, மேற்படி நிறுவனத்திற்கு பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை நான்கு ஆண்டுகளுக்கு 1.1.2011 அன்று வழங்கியது.

இதனைத் தொடர்ந்து 4.1.2011 அன்று மேற்படி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில், இத்திட்டத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தக் கூட்டங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச் சூழல் மாசடைதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் விவசாயிகளின் சார்பில் எழுப்பப்பட்டன. இந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட விவசாயிகளின் கருத்துகள் மற்றும் ஐயங்கள் உட்பட அனைத்து விவரங்களும் முழுமையாக தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் சுற்றுச் சூழல் அனுமதியை திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியது. இருப்பினும், ஆழ் துளைக் கிணறுகள் அமைத்து ஆய்வுப் பணிகளை துவங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான் வழங்க வேண்டும். 2011-ல் நான் முதலமைச்சரான பின்னர் இது நாள் வரை அந்த அனுமதியை நாங்கள் வழங்கவில்லை.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிடக் கூடிய சூழல் ஏற்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வளமான டெல்டா பகுதிகள் வறண்ட பாலைவனமாக ஆகிவிடும் என்ற அச்சம் உள்ளது. எனவே இது பற்றி ஆராய ஒரு குழுவினை அமைக்க நான் ஆணையிட்டுள்ளேன். விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சியை எனது அரசு ஊக்குவிக்காது என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

மரபணு மாற்று விதைகள் - அனுமதி கிடையாது!

மத்திய அரசின் வேளாண் விரோதச் செயல் இத்துடன் நின்றுவிடவில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களின் 200 வகைகளை தனியார் நிறுவனங்கள் மூலம் சோதித்துப் பார்க்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்துள்ளது. மனிதர்களையும் விவசாய விளை நிலங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் இந்த கள ஆய்வு அனுமதி பன்னாட்டு விதை நிறுவனங்களை மகிழ்ச்சியுற செய்யுமே தவிர; விவசாயிகளாகிய நமக்கு துன்பத்தையே தரும்.

மரபணு மாற்றுப் பயிர் மூலம் விளையும் பயிர்களில் இருந்து விதைகளை நாம் பெற முடியாது. மீண்டும் நாம் பயிரிட வேண்டுமென்றால் விதைகளை வழங்கிய தனியார் நிறுவனத்தைத் தான் நாட வேண்டும். இதன் மூலம் உணவு தானிய உற்பத்தி என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களின் ஏக போக உரிமையாகிவிடும். மேலும் பயிர் வகைகளிலும், காய்கறி மற்றும் பழ வகைகளிலும் மரபணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம் மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் விவசாயிகளும் கூறி வருகிறார்கள்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவில் இடம் பெற்றிருந்த ஆறு பேரில் ஐந்து பேர் ஒழுங்குமுறை அமைப்பில் உள்ள குறைபாடுகள் களையப்படும் வரை இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மத்திய அரசு இன்னமும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மரபணு மாற்றப் பயிர்களின் கள ஆய்வுக்கு இவ்வளவு அவசரமாக மத்திய காங்கிரஸ் அரசு ஏன் அனுமதி அளிக்கிறது? விவசாயிகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்தத் திட்டத்தை மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரிப்பது வேதனையாக இருக்கிறது.

விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான மரபணு மாற்று பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய காங்கிரஸ் அரசுக்கு வருகின்ற தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று நான் உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தமிழகத்தில் பரிசோதிக்க எனது தலைமையிலான அரசு அனுமதி வழங்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் அமையும் போது அகில இந்திய அளவில் இதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்ற உறுதியையும் நான் உங்களுக்கு இந்த நேரத்தில் அளிக்கிறேன்.

2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் இந்திய விவசாயிகளுக்கு எதிரான பல ஷரத்துகளுக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது பொருள் இருப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் நடவடிக்கைக்குரிய மானியங்கள் என்பதிலிருந்து நீக்கப்படவில்லை. மொத்த உணவு தானிய உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காட்டிற்கு மேல் மானியம் இருந்தால் 4 ஆண்டுகள் வரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும்; பின்னர் இது குறித்து திறனாய்வு செய்யப்படும் என்பதும்; இந்த மானியங்கள் 1986-ஆம் ஆண்டைய சந்தை விலை அடிப்படையில் இருக்கும் என்பதும் இந்தியாவிற்கு பாதகமான அம்சங்கள் ஆகும். இது போன்ற இந்தியாவிற்கு பாதகமான அம்சங்களை மாற்றி அமைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்.

மீனவர் பிரச்சினை

இந்தப் பகுதி மீனவர்கள் நிறைந்த பகுதி. மீன் பிடித் தொழில் நிறைந்த பகுதி. ஆனால் இந்தத் தொழிலில் எத்தகைய இடையூறுகளை, இன்னல்களை நீங்கள் எதிர்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும்; கொடுமைகளுக்கும்; சிறைபிடிப்புகளுக்கும்; நீங்கள் அடிக்கடி ஆட்படுத்தப்படுகிறீர்கள். இவை நிகழும்போதெல்லாம் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.

தமிழக மீனவர்கள் அன்றாடம் தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள சாத்தியமான ஒரு தீர்வினை காணும் பொருட்டு 27.1.2014 அன்று சென்னையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற நான் ஏற்பாடு செய்தேன். இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனது வலியுறுத்தலின் பேரில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு ஏற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 13.3.2014 அன்று இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற ஏதுவாக இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் எனது தலைமையிலான தமிழக அரசு விதித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கான நாள் முடிவு செய்யப்பட்ட பின்னரும் இதனை சீர்குலைக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 8 படகுகளில் 3.3.2014 அன்று மீன் பிடிக்கச் சென்ற 30 தமிழக மீனவர்களையும், 2 காரைக்கால் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

கடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இதுவரை 148 தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் பாரதப் பிரதமருக்கு கடிதங்களை எழுதி உள்ளேன். இருப்பினும் இலங்கை அரசின் இந்தச் செயலை இந்திய அரசு கண்டிக்கவும் இல்லை; விடுவிக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கடிதங்களுக்கு பாரதப் பிரதமர் பதிலும் அனுப்பவில்லை. நேற்றும், இன்றும் கூட 24 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மியான்மாரில் நடைபெற்ற மூன்றாவது வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிகள் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பாரத பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்கிய படம் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான என்ன நடவடிக்கையை இந்திய பிரதமர் எடுத்துள்ளார்? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் தான். எங்கள் இந்திய மீனவர்களை விடுதலை செய்யுங்கள்! எங்கள் இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு இலங்கை அதிபருடன் கை குலுக்குகிறார் பாரதப் பிரதமர். இப்படிப்பட்ட பிரதமர் தேவை தானா? இப்படிப்பட்ட காங்கிரஸ் ஆட்சி தேவை தானா? தூக்கி எறிய வேண்டாமா? தூக்கி எறிய வேண்டும்.

இலங்கை இனப் போரின் போது போர்க் குற்றங்கள் செய்த இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா இங்கிலாந்து உட்பட ஐந்து நாடுகள் முன் வந்துள்ளன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள இந்தியா, பிற நாடுகளால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை முன்மொழிய முன் வரவில்லை. இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசு நமக்கு தேவை தானா? இந்த தமிழின விரோத மத்திய காங்கிரஸ் அரசை நீங்கள் இந்தத் தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர் பிரச்சனைக்கு மூல காரணமாக விளங்குவது கச்சத் தீவு பிரச்சனை. தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவை, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தாரைவார்த்த போது அதை தடுக்கத் தவறியது தி.மு.க. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி கச்சத் தீவினை மீட்பது தான்; கச்சத் தீவு பகுதியில் நமக்குள்ள உரிமையை மீண்டும் நிலைநாட்டுவது தான். இதனை நிறைவேற்ற, வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்

வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல். வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய நாட்டைப் பாதுகாக்க நமது பாதுகாப்புத் துறை வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால் நமது ராணுவத்தை, கடற் படையினை, விமானப் படையினை நவீனமயம் ஆக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

கடந்த பத்து ஆண்டுகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வீணடித்துவிட்டது. முப்படையில் பணிபுரிபவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை. நாட்டைப் பாதுகாக்கும் முப்படைகளையே அலட்சியப்படுத்தும் மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னம் ஆக்கப்பட்டுவிட்டது. இதை சரி செய்ய தேவை மாற்றம். இந்த மாற்றத்தினை செய்ய அனைத்துத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x