Last Updated : 10 May, 2021 06:25 AM

 

Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM

குமரியில் கோடைமழை பெய்தாலும் மைனஸ் அளவாக குறையும் முக்கடல் அணை நீர்மட்டம்: நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடு

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை. (கோப்புபடம்)

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வந்தாலும்முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ்அளவாக குறைந்து வருகிறது. இதனால் நாகர்கோவில் நகரில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கோடை காலமான தற்போது குமரி மாவட்டத்தில் விட்டு விட்டுபெய்து வரும் மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. மலையோரங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை அணையில் தற்போது 41.55 அடி தண்ணீர் உள்ளது. பெருஞ்சாணியில் 54.20 அடி, சிற்றாறு ஒன்றில் 7.08, சிற்றாறு இரண்டில் 7.18, பொய்கையில் 17, மாம்பழத்துறையாறில் 14.60 அடிதண்ணீர் உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் நாகர்கோவில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கடல் அணையில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாகர்கோவில் மக்கள் பெரும் சிரமம் அடைவர். இதை கருத்தில் கொண்டு புத்தன்அணை திட்டம்மூலம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடையும் தருவாயை எட்டிய போதிலும் நடைமுறைக்கு வர மேலும் சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

இதற்கு மத்தியில் தற்போது நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. 25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையில் நீர்மட்டம் நேற்று 0.9 அடியாக குறைந்து மைனஸ் நிலையை எட்டும் தருவாயில் உள்ளது. தற்போது விநாடிக்கு 7.42 கனஅடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் இரு நாட்களுக்குள் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால் கடந்த ஆண்டை போலவே நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அதை சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்ய நாகர்கோவில் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் ஜூன் மாதத்துக்குள் முக்கடல் அணையில் தண்ணீர் பெருக வாய்ப்புள்ளது. இதனால் வேளாண் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x