Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM

ஊரடங்கின்போது உப்பு உற்பத்தி தடையின்றி நடைபெற தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளம் ஒன்றில் கூட்டமில்லாமல் தனியாக வேலை செய்யும் பெண் தொழிலாளி. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று (மே 10) முதல் வரும் 24-ம் தேதி வரை 2 வார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உப்பு அத்தியாவசிய உணவு பொருட்களில் ஒன்றாக உள்ளது. எனவே, உப்பு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், உப்பளங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக உப்புத் தொழில் விளங்கி வருகிறது. சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது உப்பளத் தொழிலாளர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டு, பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போதைய ஆட்சியர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு உரிய அறிவுரைகளை கூறியதால், உப்பளத் தொழிலாளர்களை காவல் துறையினர் தடுக்கவில்லை.

இந்த ஆண்டும் கரோனா தொற்றின் தீவிரத்தை தொடர்ந்து இன்று (மே 10) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இம்முறையும் உப்பளத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து, பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

உப்பளத் தொழிலாளர்கள் காலை 6 மணிக்கு பணிக்கு சென்றுவிட்டு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பிவிடுவார்கள். உப்பளத் தொழிலாளர்களிடம் அடையாள அட்டை ஏதும் இருக்காது. எனவே, அவர்களிடம் கெடுபிடி செய்யாமல் அனுமதிக்க வேண்டும். உப்பளங்களில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தான் பணி செய்வார்கள்.

பெரும்பாலும் ஒரு உப்பள பாத்திக்கு ஒரு தொழிலாளர் தான் வேலை செய்வார். அதுபோல அவர்கள் உப்பு தண்ணீரிலேயே நிற்பதாலும், கைகளை உப்பு தண்ணீரால் தொடர்ந்து கழுவுவதாலும் அவர்களுக்கு கிருமி நாசினி தேவையில்லை. உப்பளத் தொழிலாளர்களால் கரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, உப்புத் தொழில் தடையின்றி நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x