Published : 09 May 2021 01:27 PM
Last Updated : 09 May 2021 01:27 PM

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 'வார் ரூம்': ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம்

கரோனா கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழும அலுவலகத்தில் 'வார் ரூம்' (War Room) எனப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (UCC) அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள '104' சுகாதார சேவை மையத்துடன் இணைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைப்பது, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைகளை நிர்வகிப்பது ஆகியவற்றுக்கான சிறப்பு மையமாக இது செயல்படும்.

இந்த மையம் 24 மணி நேரமும் இணையவழி மூலம் கண்காணித்து, பல்வேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகளின் நிலையை அறிந்துகொண்டு, அதன் மூலம் தேவைப்படுவோருக்கு உதவும்.

சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கும். படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளிலும் இம்மையம் ஈடுபடும்.

இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (மே 09) வெளியிட்டார்.

மேலும், ஆக்சிஜன் தேவை கண்காணிப்பு மற்றும் அவசர உதவிக்காக நந்தகுமார் ஐஏஎஸ், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை நிர்வகிப்பதற்கு எஸ்.உமா ஐஏஎஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கள ஆய்வு மேற்பார்வையாளராக எஸ்.வினீத் ஐஏஎஸ், சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகள், கோவிட் மருத்துவமனைகளுக்காக கே.பி.கார்த்திகேயன் ஐஏஎஸ், கட்டளை மையத்தின் தரம் மற்றும் செயல்களை கண்காணிப்பதற்கு டி.ஆர்.ஓ அழகுமீனா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x