Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

கிருஷ்ணகிரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது: மருத்துவர் பீலா ராஜேஷ் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 20 கிலோ லிட்டர் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வணிகவரி, பத்திரபதிவுத்துறை அரசு முதன்மைச் செயலர், மருத்துவர் பீலா ராஜேஷ் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:

கரோனா 2-வது அலை பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 5 கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் மூலம், நேற்று முன்தினம் வரை பரிசோதனை செய்யப்பட்ட 3,05,090 நபர்களில் 2,87,656 நபர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 17,434 நபர்கள் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, 14,843 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2,451 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 122 கட்டுப்பாட்டு மண்டலங்கள் 3,063 கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 20 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உள்ளது. நாளொன்றுக்கு 4.07 கிலோ லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட 518 சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளன. இதில் 175 சிலிண்டர்கள் பயன்படுத்தப் படுகிறது. முன்கள பணியாளர்கள், 45 வயதிற்கு உட்பட்டவர்கள் என 1,43,194 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 9,000 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாவட்டத் தில் 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டு சுகாதார துறை, வருவாய் துறை, காவல் துறை இணைந்து பிற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x