Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவிக்கு எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி: சோனியா காந்தி முடிவெடுப்பார் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்வார் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 18 இடங்களில் வென்றது. இந்நிலையில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு தொடர்பாக ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை நடந்தது.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்று எம்எல்ஏக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

இக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, “சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி அச்சமூட்டும் வகையில் உள்ளது. அக்கட்சியின் கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவே உள்ளன. எனவே சீமானை எதிர்கொள்ளும் திறமை வாய்ந்த ஒருவர் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர், துணைத் தலைவர், கொறடா தேர்வு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர் இது குறித்து விரைவில் அறிவிப்பார்” என்றார்.

காங்கிரஸ் கட்சியில் சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகை, ஏ.எம்.முனிரத்தினம், விஜயதரணி, பிரின்ஸ் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக தலித் இருப்பதால், சட்டப்பேரவை கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். பெண்கள், சிறுபான்மையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டதால் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு ஏற்படவில்லை என்று காங்கிரஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x