

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்கள், பாஜக 6 இடங்கள் என ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், பாஜக எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தனர்.
இதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கடந்த 3-ம் தேதி மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரி, 16 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார். தொடர்ந்து, மே 7-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக்கொள்வதற்கான கடிதத்தை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயபால், பக்தவச்சலம் ஆகியோர் ஆளுநரிடம் வழங்கினர்.
தற்போது புதுச்சேரியில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், ஆளுநர் மாளிகை வளாகத்தில் எளிமையான முறையில் முதல்வர் பதவி ஏற்பு விழா இன்று (மே 07) நடைபெற்றது. பிற்பகல் 1.10 மணிக்கு ஆளுநர் மாளிகை வந்த ரங்கசாமியை தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். பிற்பகல் 1.12 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார்.
1.20 மணிக்கு ஆளுநர் தமிழிசை வணக்கும் கூறி ரங்கசாமிக்கு தமிழிலேயே பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ரங்கசாமி கடவுளின் பெயரால் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து, ரங்கசாமிக்கு ஆளுநர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ஆளுநருக்கு ரங்கசாமி சால்வை அணித்து, பூச்செண்டு வழங்கினார். தொடர்ந்து, தலைமை செயலாளர் அஸ்வனி குமார் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, நிர்மல்குமார் சுரானா, அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், கோகுலகிருஷ்ணன் எம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ரங்கசாமிக்கு பூச்செண்டு வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்ற பின்னர், சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான அரிசி வழங்குவது, 10 ஆயிரம் நபர்களுக்கு புதியதாக முதியோர், கணவனை இழந்த பெண்களுக்கு பென்ஷன் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செண்டாக் பணம் வழங்கும் 3 கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார் .