Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

தமிழகத்தில் ஒருநாள் மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது: தடையின்றி வழங்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இன்று வரை மட்டுமே உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்துக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதை இன்றைக்குள் உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதன் அடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாகமுன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் இறந்ததாக செய்திகள் வெளியானது குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘மே 1 மற்றும் 2ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கான 220 டன் ஆக்சிஜன் கிடைத்தது.அதற்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக கூறிய 475 டன் ஆக்சிஜன் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 டன்னில்60 டன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பப்படுகிறது. பெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் மையத்தில் 150 டன் உற்பத்திசெய்யப்படுவதால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களின் தேவை பூர்த்தியாகிறது. தற்போது தமிழகத்துக்கு தினமும் 475 டன் ஆக்சிஜன் தேவை.

இதே நிலை நீடித்தால் தமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே 475 டன் ஆக்சிஜன் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும். செங்கல்பட்டில் இறந்த 13 பேரும் கரோனா தொற்று இல்லாத நோயாளிகள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்கள் இறக்கவில்லை’’ என்று விளக்கமளித் தார்.

மோசமான சூழ்நிலை ஏற்படும்

அப்போது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாகஇயக்குநரும், நோடல் அதிகாரியுமான உமாநாத் ஆஜராகி, ‘‘கேரளாவில் உள்ள பாலக்காடு கஞ்சிக்கோடு மையத்தில் உற்பத்தியாகும் 40 டன் ஆக்சிஜன் தென் தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கையிருப்பில் உள்ளஆக்சிஜன் சிலிண்டர்கள் நாளை(வெள்ளி) வரை மட்டுமே இருக்கும்.அதன்பிறகு தமிழகமும் மிக மோசமான சூழ்நிலையை எட்டிவிடும்.

‘ரெம்டெசிவிர்’ பொருத்தமட்டில் 2.50 லட்சம் கேட்டதில் இதுவரை 1.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரம் குப்பிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மையத்தில் விற்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்கவுள்ள தமிழக முதல்வரால், கோவை, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை மையங்களை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று உமாநாத் தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் ஆஜராகி, ‘‘ பெரும்புதூரிலிருந்து 25 டன்ஆக்சிஜன் மட்டுமே தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்து ஒரு வாரத்தில் தெரியவரும். ‘ரெம்டெசிவிர்’ உற்பத்தியை அதிகரிக்க மேலும் 7 நிறுவனங்களை இந்த வார இறுதிக்குள் அனுமதிக்கவுள்ளோம். ஆக்சிஜன்ஒதுக்கீட்டுக்கான மத்திய அரசின்உத்தரவுக்காக காத்திருக்காமல் தேவைப்படும் ஆக்சிஜனை உடனடியாக அனுப்ப நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்ஆஜராகி, ‘‘தமிழகத்துக்கு ‘ரெம்டெசிவிர்’ மற்றும் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசுக்குமுறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

டிஆர்டிஓ ஆக்சிஜன் உற்பத்தி

அதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதால் வடமாநிலங்களில் உள்ளது போல தென் மாநிலங்களிலும் டிஆர்டிஓ ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளை மத்திய அரசு விரைவாக தொடங்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்துக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு நாளைக்குள் (இன்று) உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் கிடைக்காமல் உயிர்கள் பறிபோகக் கூடாது. அதேபோல ஆக்சிஜன் இல்லாமல் மரணங்கள் ஏற்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். கரோனா மூன்றாவது அலை உருவாகும் அச்சம் எழுந்துள்ள நிலையில் தடுப்பூசிகளையும் மத்திய அரசு விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை மே 12-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x