Published : 28 Jun 2014 05:41 PM
Last Updated : 28 Jun 2014 05:41 PM

கருணாநிதியின் "நதிநீர் பிரச்சினையில்..." அறிக்கைக்கு ஜெயலலிதா பதிலடி

கருணாநிதி வெளியிட்ட "நதிநீர் பிரச்சினையில் கேரளமும் தமிழகமும்" என்ற அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது என்று முதல்வர் ஜெயலலிதா பதில் அறிக்கையில் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கை வருமாறு:

மக்களின் செல்வாக்கை முற்றிலும் இழந்து விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி, “நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்” என்ற தலைப்பில் எதையும் புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில், முன்னுக்குப் பின் முரணாக “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிக்கேற்ப ஓர் அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அரசு அதிகாரிகளின் உதவி இல்லாமல் தானாகவே அறிக்கை எழுதினால் இப்படித்தான் இருக்கும் என்பதை திரு.கருணாநிதி ஏற்கெனவே பல முறை வெளிபடுத்தி இருக்கிறார்.

திரு. கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கேரள சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி, “முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று பதில் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த உண்மை நிலையை நான் மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. பின் குறிப்பில், “இந்த அணைகள் கேரள மாநிலத்தில் உள்ளன” என்றும், “தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், 2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், அணைகள் அமைந்துள்ள இடத்தின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை விவரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. எனவே தான், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் கேரள மாநில அணைகள் பட்டியலின் கீழ் காட்டப்பட்டு உள்ளன. அதே சமயத்தில், பின் குறிப்பில் “இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன” என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரிய அணைகள் குறித்த இந்தப் பதிவேட்டில், புவியியல் அமைப்புப்படி அணை அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் நோக்கத்தில், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்களை உள்ளடக்கிய சில மாற்றங்களை தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் ஏதேனும் தவறு உள்ளதாக கருதினால், திரு.கருணாநிதி ஏன் அப்போதே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை? அன்று ஏன் மவுனமாக இருந்தார்? இதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மேற்படி அணைகள் தமிழ்நாட்டினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், தமிழ்நாடு அரசின் வற்புறுத்தலின் பேரில், தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில், 2கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று பின் குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தின் கீழ் வரும் அணைகள் பட்டியலிலும், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று மேற்படி அணைகளுக்கு எதிராக தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 27.12.2013 அன்று நடைபெற்ற 32-வது அணை பாதுகாப்பு தேசிய குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் கீழ் வரும் அணைகள் பட்டியலில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை அணைப் பாதுகாப்பு தேசியக் குழு ஏற்றுக் கொண்டது. இது போன்ற கோரிக்கைகள் பிற மாநிலங்களிடமிருந்து வரப் பெற்று, தேசியப் பதிவேடு புதுப்பிக்கப்படும் போது, தமிழ்நாட்டின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட கோரிக்கையின் வாசகங்கள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் சார்பில், மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவருக்கு விரிவான கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், மத்திய நீர்வளக் குழுமத்தின் அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ள குறிப்பில், பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் உள்ள அணைகளின் பட்டியல்கள், அணைகளின் இருப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கீழ் அந்த அணைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும்; இந்தத் தகவல்களின் அடிப்படையில், யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது என்றும்; இந்தப் பதிவேட்டில் ஏதாவது தவறு இருப்பது சுட்டிக் காட்டப்பட்டால், அவை திருத்தப்படும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முல்லைப் பெரியாறு குறித்த 7.5.2014 நாளைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் தேக்கடி மாவட்டத்தில் இருக்கிறது என்றும், இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேற்காணும் விளக்கங்களிலிருந்து, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் புவியியல் அமைப்புபடி கேரளாவில் இருந்த போதிலும், அவை தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்பதும்; தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. எனவே, திரு. கருணாநிதி கூறுவது போல், தமிழ்நாட்டின் உரிமை எதுவும் பறிபோகவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், இவற்றை எல்லாம் ஆய்ந்து பார்க்காமல், “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிக்கேற்ப நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் இந்தச் செயலை நினைக்கும் போது, “ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை கேரளாவிற்கு பக்கவாத்தியம் வாசிப்பது போல் இருப்பது மட்டுல்லாமல், உச்ச நீதிமன்றத்தையே அவமதிப்பது போல் உள்ளதால், இவரது அறிக்கையே உச்சநீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகக் கூடியது. “எண்ணித் துணிக கருமம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப செயல்படுவது நல்லது, இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என்பதை திரு. கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அடுத்தபடியாக, “காவேரி நதிநீர்ப் பிரச்சனை தீர்ந்துவிட்டதா? மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு விட்டதா?” என்று வினவியிருக்கிறார் திரு. கருணாநிதி. காவேரி மேலாண்மை வாரியத்தைப் பொறுத்தவரையில், மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து நான் வலியுறுத்தி இருக்கிறேன். இது தொடர்பாக, சில சர்ச்சைகளை மத்திய அமைச்சர்கள் எழுப்பியவுடன், இது குறித்து 31 பக்கங்கள் கொண்ட விளக்கமான கடிதத்தினை மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு எழுதி இருக்கிறேன். தற்போதைய மத்திய அரசு நிச்சயம் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது தலைமையிலான அரசின் பகீரத முயற்சியின் காரணமாகத் தான், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதை திரு. கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கச்சத்தீவு, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, இலங்கைத் தமிழர் பிரச்சனை என அனைத்திலும் முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்த திரு. கருணாநிதிக்கு தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றி பேசவே எந்த அருகதையும் இல்லை.

“முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்பட்டு விட்டதா?” என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் கேள்வியிலிருந்தே, இந்தப் பிரச்சனையில் எனக்கும், எனது தலைமையிலான அரசுக்கும் நல்ல பெயர் கிடைத்துவிட்டதே என்ற திரு. கருணாநிதியின் ஆதங்கத்தையும், ஆற்றாமையையும் தெரிந்து கொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், ஒரு மேற்பார்வைக் குழுவை அமைக்கவும், அந்தக் குழுவில் மத்திய அரசின் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவது உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக, கேரள சட்டசபையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் “நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியம் இல்லை” என்று பேசியதை சுட்டிக்காட்டி, இதற்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, “நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை” என்று காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி கூறியதற்கு பதில் அளிக்க வக்கில்லாமல்; நதிநீர் இணைப்புத் திட்டத்தையே முடக்க நினைத்த காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து; சுயநலத்திற்காக நதிநீர் இணைப்புப் பிரச்சனையில் வாய்மூடி மவுனம் சாதித்த திரு. கருணாநிதி, இப்போது வாய் திறப்பது விந்தையாக இருக்கிறது. நதிநீர் இணைப்புத் திட்டத்தினை நான் தொடர்ந்து வற்புறுத்தி கொண்டு வருகிறேன். நதிநீர் இணைப்பு குறித்த பொதுநல வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒரு சிறப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஓர் ஆண்டு கழித்து சிறப்புக் குழுவினை அமைத்த தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறை கூட்டக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. மத்தியிலே ஆட்சியில் இருந்த போது மவுனம் சாதித்த திரு. கருணாநிதி; ஆட்சியை விட்டு வெளியே வந்த பிறகு கூட, தன் மகளுக்காக மத்திய அரசிடம் மன்றாடிய திரு. கருணாநிதி; ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை? மகளா, மாநிலமா என்றால் மகள் தான் என்பது திரு. கருணாநிதியின் நிலைப்பாடாக அப்போது இருந்தது. இப்போது அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காக கேரள அமைச்சர் கூறியதையெல்லாம் மேற்கோள் காட்டி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

“வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று கங்கை-காவிரி இணைப்புக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வித்திட்ட மகாகவி 4பாரதியாரின் கனவினை நனவாக்கும் வகையில், அதன் முதற்கட்டமாக 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அத்திக்கடவு-அவிநாசி வெள்ளப் பெருக்கு கால்வாய் திட்டம்; 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பெண்ணையாறு (சாத்தனூர் அணை) – பாலாறு இணைப்புத் திட்டம் மற்றும் பெண்ணையாறு-நெடுங்கால் அணைக்கட்டு-பாலாறு இணைப்புத் திட்டம்; 5,166 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி ஆற்றின் வெள்ள நீரை வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடும் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும், 11,421 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி படுகை கால்வாய் முறைகளை நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றை முதற்கட்டமாக நிறைவேற்ற நிதி ஒதுக்குமாறும்; மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், பாலாறு, காவேரி மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கவும்; மேற்கு நோக்கி பாயும் பம்பா மற்றும் அச்சன்கோயில் நதிகளின் நீரை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்கு திருப்பிவிடவும் ஆவன செய்யுமாறு, மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து 3.6.2014 அன்று நான் வலியுறுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரையில், தமிழர்களின் நலன் தான் முக்கியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தத்தில், திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் முயற்சி போல் அமைந்துள்ளது. தமிழர்களின் நலன் கருதி, இது போன்ற செயலில் இனி ஈடுபட வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதியை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். திரு கருணாநிதியின் அரை வேக்காட்டு அறிக்கையை வெளியிட்ட பத்திரிகைகள் மீது கோபித்துக் கொள்ளாமல், இந்த நல்ல விளக்கத்தைக் கூற எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x