Last Updated : 04 May, 2021 06:44 PM

 

Published : 04 May 2021 06:44 PM
Last Updated : 04 May 2021 06:44 PM

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துப் பெட்டி திருட்டு: ஒப்பந்த ஊழியர் பணிநீக்கம்

மதுரை

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துப் பெட்டி திருட்டுப் போன விவகாரத்தில் ஒப்பந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட செவிலியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோருக்குப் பயன்படுத்தும் முக்கிய மருந்தான ரெம்டெசிவிருக்குத் தட்டுப்பாடு இருக்கும் சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்தைப் பெறுவதற்கு நாள் கணக்கில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள கரோனா மருத்துவமனையின் முதல் தளத்திலுள்ள கூடுதல் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிலருக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து செலுத்த வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் மே 2-ம் தேதி 9 மருந்துப் பெட்டிகள் கொண்டு வர மதுரை ஆட்சியர் வளாகப் பகுதியில் செயல்படும் மருந்து குடோன் நிர்வாகத்திற்கு, சம்பந்தப்பட்ட வார்டு மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடோன் ஊழியர் ஒருவர் 9 ரெம்டெசிவிர் மருந்துப் பெட்டிகளைக் கொண்டுவந்து கரோனா வார்டில் வைத்துவிட்டு, அங்குள்ள செவிலியர்களிடம் கூறிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர், நோயாளிகளுக்கு மருந்து செலுத்துவதற்கு ரெம்டெசிவிர் பெட்டியைத் திறந்தபோது, ஒன்றில் மட்டுமே மருந்து இருந்ததும், எஞ்சிய 8 பெட்டிகளில் மருந்து பாட்டில் இன்றிக் காலியாக இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டீன் சங்குமணி உத்தரவின்பேரில், மதிச்சியம் காவல் நிலையத்தில் நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) சையது அப்துல் காதர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, காலி மருந்துப் பெட்டிகளைக் கொண்டு வரச்செய்து, குடோன் ஆவணங்களை ஆய்வு செய்தனர். பணியில் இருந்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மதிச்சியம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தேவகி வழக்குப் பதிவு செய்தார்.

இதற்கிடையில் ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டு சென்று விநியோகித்த சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியரைப் பணிநீக்கம் செய்து மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகார் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரிக்கிறோம். சிசிடிவி மூலம் சில தகவல்களைச் சேகரித்துள்ளோம். குடோன் ஊழியர் கொண்டுவந்து வைத்தாலும், வார்டில் பணியில் இருந்த செவிலியர் மருந்தைச் சரிபார்த்து வாங்கினாரா, எவ்வளவு நேரம் கழித்து, மருந்துப் பெட்டிகள் திறக்கப்பட்டன என்பன போன்ற பல்வேறு கோணத்தில் விசாரிக்கிறோம்.

அரசு மருத்துவமனைக்கு விநியோகிக்கும் வகையில், ஒரு மருந்துப் பெட்டியின் விலை சுமார் ரூ.4 ஆயிரத்துக்கு அதிகம் என்கிறார்கள். வெளியில் தட்டுப்பாடு இருப்பதால் கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கில் திருடப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்துத் தொடர்ந்து விசாரிக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x