Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கரோனா தொற்று பரவல் அச்சத்தால் பயணிகள் ரயில் சேவையில் பாதிப்பு: வேலையின்றிப் பரிதவிக்கும் தொழிலாளர்கள்

கரோனா அச்சத்தால் பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்வது குறைந்து வருவதால், ரயில்களின் சேவையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில்வே துறையை நம்பியிருந்த தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர் என ஆயிரக்கணக்கானோர் வேலையின்றித் தவிக்கின்றனர்.

இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களில் தினமும் 2.30 கோடி பேர் வரை பயணம் செய்தனர். குறிப்பாக, மும்பை, சென்னை உட்பட ஏழு முக்கிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் மட்டும் சுமார் 1.23 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.

ஆனால், கரோனா பாதிப்புக்குப் பிறகு தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கரோனா தாக்கம் குறைந்ததால், கடந்த ஜனவரி முதல் சுமார் 75 சதவீத பயணிகள் ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு கடுமையாக இருப்பதால், மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். பயணிகளின் வருகை இல்லாததால், நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே துறையை நம்பியே வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சுமை தூக்குவோர் கவலை

ரயில் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிலர்கூறும்போது, "ரயில்கள் வழக்கம்போல இயங்கினால், ஒவ்வொரு தொழிலாளியும் தினமும் குறைந்தபட்சம் ரூ.500 சம்பாதிப்பார். அதுவே அவர்களது குடும்ப வாழ்வாதாரம். தற்போது, பயணிகள் ரயில்கள் முழு அளவில் இயங்கவில்லை. ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன.

மேலும், கரோனா அச்சத்தால்சுமை தூக்கும் தொழிலாளர்களையும் பயணிகள் எதிர்பார்ப்பதில்லை. இதனால், வேலையின்றித் தவிக்கிறோம். அன்றாட செலவுகளுக்குக்கூட பணமின்றிக் கஷ்டப்படுகிறோம்.

எனவே, எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் நிவாரணம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்" என்றனர்.

ரயில்களில் உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘ரயில்களில் பயணிகளுக்கு உணவு விநியோகம் செய்யும்போது எங்களுக்கு தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை கமிஷன் கிடைக்கும்.

மேலும், பணியில் இருக்கும்போது பெரும்பாலான நேரங்களில் சாப்பாடும் இலவசமாக கிடைக்கும். ஆனால், இப்போது குறைந்தஅளவில்தான் ரயில்கள் இயங்குகின்றன. மேலும், கரோனா அச்சத்தால் மக்கள் ரயில்களில் உணவுப்பொருட்கள் வாங்குவதையும் தவிர்த்து வருகின்றனர். கரோனாவால் எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

கரோனா அச்சத்தால்சுமை தூக்கும் தொழிலாளர்களையும் பயணிகள் எதிர்பார்ப்பதில்லை. இதனால், வேலையின்றித் தவிக்கிறோம். அன்றாட செலவுகளுக்குக்கூட பணமின்றிக் கஷ்டப்படுகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x