Last Updated : 30 Apr, 2021 09:39 PM

 

Published : 30 Apr 2021 09:39 PM
Last Updated : 30 Apr 2021 09:39 PM

கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி

கருத்துக் கணிப்புகள் பொய்த்து போகும் எனவும், நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஏப். 30) கூறியதாவது, ‘‘மத்தியில் இருந்து தடுப்பூசி வந்தால் தான் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட முடியும் என்று ஆளுநர் கூறியுள்ளார். மத்திய அரசு உடனடியாக புதுச்சேரிக்கு 1 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

சில மருத்துவமனை, மருத்துவ கல்லூரிகள் கரோனா நோயாளிகளிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பெறுவதாக புகார் வருகிறது. தனியார் மருத்துவமனைகள் கரோனாவைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கியுள்ளார்கள். இதுதொடர்பாக புகார்கள் வருகின்றன.

ஆர்டிபிசிஆர் கிட் ஒன்றின் விலை ரூ.199. ஆனால் பரிசோதனைக்காக ரூ.8 ஆயிரம் கேட்பது மிகப்பெரிய கொள்ளை. இன்றைய தினம் தான் கரோனா பரிசோதனைக்கு ரூ.500 வசூலிக்க வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

கரோனா பரிசோதனைக்காகவும், நோயாளிகளிடமும் அதிக கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவமனைகளை சுகாதாரத்துறை கண்காணித்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே. 2ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் தொடர்பாக பல கருத்து கணிப்புகள் வந்தள்ளன. இதில் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அதிக இடத்தில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணி குறைந்த இடத்தை பெறும் என்று கூறியிருக்கிறார்கள். ஒருசில கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த கருத்து கணிப்பு என்பது எந்த அடிப்படையில் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 29-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திலேயே கருத்து கணிப்பை கூறுகிறார்கள். பல மாநிலங்களில் பல சமயங்களில் கருத்து கணிப்புகள் பொய்த்து பொய் உள்ளன.

ஒரு தொகுதியில் 40 ஆயிரம் பேர் இருக்கும் நிலையில், வெறும் 300 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்று அலுவலகத்தில் இருந்து கொண்டு, கருத்து கணிப்பு செய்துவிட்டதாக ஊடகங்கள் கூறி வருகிறார்கள். சில சமயங்களில் கருத்து கணிப்பு நியாயமாக வரும்.

ஆனால், பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் பொய்த்து போய் உள்ளன. இதுதான் சரித்திரம்.

கண்டிப்பாக காங்கிரஸ்-திமுக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும். தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார்.

ஒருசில அரசியல் கட்சிகள் தங்களிடம் உள்ள பணப்பலத்தை வைத்தும், மத்தியில் உள்ள அதிகார பலத்தை வைத்து தில்லுமுள்ளு வேலையை செய்ய தயாராக உள்ளார்கள். ஆள்பிடிக்கும் வேலையை பார்க்கிறார்கள். சில அரசியல் கட்சி தலைவர்களை விலைக்கு வாங்கும் வேலையையும் பார்க்கிறார்கள். இது புதுச்சேரியில் பலிக்காது.

புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், பாஜகவின் சூழ்ச்சி வலையில் விழாதீர்கள். மாநில நலன் முக்கியம். புதுச்சேரியை காப்பாற்ற வேண்டும்.

கரோனா சமயத்தில் மோடி அரசு எந்த அளவுக்கு தோல்வியுற்றுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை, சாலையிலேயே உயிரிழக்கும் நிலை போன்றவற்றை பார்த்து வருகிறோம்.

இப்படிப்பட்ட மோசமான ஆட்சி கொடுக்கிற பாஜகவை நம்பாதீர்கள். அவர்களை நம்பினால் மோசம் போய் விடுவீர்கள். எனவே, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால்தான் புதுச்சேரியை காப்பாற்ற முடியும்.

மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். எனவே, நாம் ஒருங்கிணைந்து புதுச்சேரி மக்களை காப்போம். கரோனாவை விரட்டி அடிப்போம்.’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x