Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் 50 சதவீதம் வருவாய் இழப்பு

கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் 50 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. எனவே, கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூரம், பயண நேரத்தை கணக்கிட்டு தேவையான அளவு பேருந்துகளை அரசுப் போக்கு வரத்துக் கழகம் இயக்கிவருகிறது. இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கமட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை களில் பேருந்துகள் இயங்குவ தில்லை. இதனால், கோவை அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு தினமும் 50 முதல் 55 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டுதொடக்கத்தில் நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் என கோவையில் மொத்தம் 1,012 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மொத்தம் 940 பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

இதில், 640 நகர பேருந்துகள், 300 புறநகர்பேருந்துகள் அடங்கும். கரோனா பாதிப்புக்கு முன்புவரை தினந்தோறும் 4.32 லட்சம் பயணிகள் பேருந்துகளில் பயணித்து வந்தனர். இந்தஎண்ணிக்கை தற்போது 2.72 லட்சமாக குறைந்துள்ளது. முன்பு கிலோமீட்டருக்கு ரூ.32 வருவாய் கிடைத்துவந்த நிலையில், தற்போது ரூ.20-ஆக குறைந்துள்ளது. கட்டுப்பாடுகள் அமலாவதற்கு முன்புவரைதினமும் ரூ.1.45 கோடி முதல் ரூ.1.50கோடி வரை மொத்த வருவாய் கிடைத்துவந்தது.

தற்போது ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையே வருவாய் கிடைக்கிறது. தொற்று பரவல் அச்சம் காரணமாக பல பயணிகள் சொந்த வாகனங்களில் பயணித்து வருகின்றனர். தேவையில்லாமல் வெளியே செல்வதும் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆம்னி பேருந்துகள்

கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.துரைக்கண்ணன் கூறும்போது, “தனியார் சார்பில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் சுமார் 200 நகர பேருந்துகள் இயங்கி வருகின் றன. வார நாட்களில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையும்,மாலை 5.30 மணி முதல் 7 மணிவரை மட்டுமே பயணிகள் கூட்டம்உள்ளது. அதிலும், 44 இருக்கை களில் பயணிகளை அமரவைத்து இயங்குவதால் போதிய வருவாய் இல்லை. ஓராண்டுக்கும் மேலாக இதே நிலை நீடிப்பதால் பலர் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, நிலைமை சீராகும்வரை வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் கட்ட அரசு வழிவகை செய்ய வேண்டும். தொழிலை நடத்த அவசரகால கடன் வழங்க வேண்டும்” என்றார்.

“கோவையில் மொத்தமுள்ள ஆம்னி பேருந்துகளில் சுமார் 100 ஆம்னி பேருந்துகள் மட்டுமே தற்போது பகலில் இயங்கி வருகின்றன. அதிலும், போதிய பயணிகள் இல்லாததால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே, தொழிலை காப்பாற்ற சாலை வரி கட்டுவதில் விலக்கு போன்ற சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்” என கோயம்புத்தூர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், முகவர்கள் சங்கத்தின் செயலாளர் என்.செந்தில்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x