Published : 16 Dec 2015 12:33 PM
Last Updated : 16 Dec 2015 12:33 PM

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தகுதியுடைய அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்சகராகலாம் என்ற கடந்த 2006-ம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அப்போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது. இதனையடுத்து இன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக முடியாது, ஆகம விதிகளை பின்பற்றியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனம் பிரிவு 14-ல் உள்ள சமத்துவத்துகான உரிமையை ஆகம சாஸ்திர விதிகள் மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுகளுக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 36,000 கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர்களாகலாம் என்ற சாத்தியம் ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை 207 பேர்களுக்கு இந்து கோயில்களில் பூஜை செய்யும் பயிற்சி அளித்தது. இதன் மூலம் அவர்கள் அர்ச்ச்கர்களாக நியமிக்கப்பட தயார் நிலையில் இருந்தனர். அப்போது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் இவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட முடியவில்லை.

இந்நிலையில் இன்று ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x