Published : 31 Dec 2015 08:01 AM
Last Updated : 31 Dec 2015 08:01 AM

துரைப்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கீட்டுப் பணி: தேடி வந்து சேவை செய்யும் அதிகாரிகள்

சென்னை சைதாப்பேட்டை அடையாற்றின் கரையோரம் வசித்த மக்களுக்கு துரைப்பாக்கம் எழில் நகரில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக 1,115 பேருக்கு இங்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. குடியமர்த்தப்படும் பயனாளிகளுக்கு தேவையான வசதிகளை இருப்பிடத்தை தேடி வந்து அதிகாரிகள் செய்து தருவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு அங்கு முகாமிட்டுள்ள கல்வித்துறை அலுவலர்கள் உடனுக்குடன் இடமாற்ற உத்தரவு வழங்கி வருகின்றனர்.

“மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்குள்ள பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் அமைக்கப்படும். இடமாற்றம் செய்ய விரும்பாத மாணவ, மாணவிகள் பள்ளி சென்று வர பேருந்து வசதி செய்து தரப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் உடனுக்குடன் ரேஷன் கார்டுகளை அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து இப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது:

ஜானி (கார் ஓட்டுநர்):

பல இடங்களில் மின்சார கேபிள்கள் மக்கள் செல்லும் நடைபாதையில் இடையூறாக அமைக்கப்பட்டுள்ளன. மின்சார மீட்டர்களில் வயர்கள் பாதுகாப்பு இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்கும் பணியும் நிறைவடையாமல் உள்ளது.

நீலகண்டன் (கட்டிட தொழிலாளி):

அருகிலுள்ள பகுதிகளில் ரவுடிகள் ஆதிக்கம் நிறைந்திருப்பதாகவும், அதனால் பாதுகாப்பாக இருக்குமாறும் போலீஸார் அறிவுறுத்தி செல்கின்றனர். இதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. இங்கு போலீஸ் புறக்காவல் நிலையத்தை அமைக்க வேண்டும்.

லெட்சுமி (தனியார் நிறுவன ஊழியர்:

நாங்கள் ஏற்கெனவே வசித்த இடத்தில் மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சென்று வந்தோம். ஆனால் இங்கிருந்து வேலைக்கு செல்ல சரியான பேருந்து வசதி இல்லை. டீலக்ஸ் ரக பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கே வருமானத்தில் பெரும் பங்கு செலவாகும். அதனால் இப்பகுதியில் எங்கள் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

எஸ்.ராஜேஷ் (பெயிண்டர்):

வீடுகளை இழந்த மக்களுக்கு உடனுக்குடன் தமிழக அரசு கண்ணகிநகர் அல்லது துரைப்பாக்கம் பகுதியில் வீடுகள் வழங்கி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 2 நாட்களில் 400 பேரை குடியமர்த்தியுள்ளனர்.

பி.ராமந்திரன், ஓம் லலிதா:

நாங்கள் கூலி தொழிலாளிகள். கடந்த 15 ஆண்டுகளாக சைதாப்பேட்டை குடிசைப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். ஓட்டுரிமையை தவிர, எந்த அடையாள அட்டையும் இல்லை. எங்களிடம் பழைய டோக்கன் இல்லை. எனவே, எங்களுக்கு வீடுகளை ஒதுக்கித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.ரூத், வி.லட்சுமி:

நாங்கள் கூலி வேலை செய்துதான் பிழைத்து வருகிறோம். எங்களிடம் டோக்கன் எதுவும் இல்லை. தற்போதுள்ள 1,200 பேருக்கு வீடுகளை வழங்கிய பிறகு, எங்களுக்கு வீடுகளை வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் எங்களை கைவிட்டு விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

எஸ்.சங்கர், ஆர்.பழனி:

இங்கிருந்த குடிசைகளில் கடந்த 13 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கி இருந்தோம். இப்போது அதுவும் இல்லாமல், இந்த பாலத்தின் கீழ்தான் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறோம். எனவே, தமிழக அரசு எங்களுக்கும் வீடு ஒதுக்கி தந்தால் நன்றாக இருக்கும்.

297 சதுர அடி

எழில் நகரில் இரண்டு பகுதிகளாக 6 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 3,100 வீடுகள் ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 2,900 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபகுதியை ஒட்டி ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட சுனாமி குடியிருப்பில் 2,048 வீடுகள் உள்ளன. ஆக மொத்தம் எழில் நகர் குடியிருப்பில் 8,048 வீடுகள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதி தனி நகரம் போல் காட்சியளிக்கிறது.

ஒரு வீட்டின் பரப்பளவு 297 சதுர அடி. இதில் ஒரு படுக்கை அறை, ஹால், சமையலறை, கழிப்பறை அமைந்துள்ளன. வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை பய னாளர் பங்காக செலுத்த வேண்டும். இதன்படி ரூ.19,500-ஐ குடிசை மாற்று வாரியத்திடம் செலுத்த வேண் டும். ஆனால், வெள்ள பாதிப்பில் அனைத்தையும் இழந்தவர்கள் இங்கு குடியமர்த்தப் படுவதால் அவர்களிடம் எவ்வித பயனாளர் பங்கு தொகையும் பெறாமல் வீடு ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது. அதேசமயம் பராமரிப்புக் கட்டணமாக மாதம் தோறும் ரூ.250 செலுத்த வேண்டும் என கு.மா.வா. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x