Last Updated : 27 Apr, 2021 06:29 AM

 

Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்பு சாலை விபத்துகள்: விதிமீறல் வாகன ஓட்டுநர்கள் மீது காவல்துறை நடவடிக்கை தீவிரம்

கோவை மாநகரில் மீண்டும் உயிரிழப்பு விபத்துகள் அதிகரிப்பதால், விதிமீறல் வாகன ஓட்டுநர்கள் மீதான நடவடிக்கையை, போக்குவரத்து போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரோனா பரவலைத் தடுக்க கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால், மாநகரில் ஆண்டின் மொத்த சாலை விபத்துஎண்ணிக்கை குறைந்தது. காவல்துறையினரின் புள்ளிவிவரப்படி, கோவை மாநகரில் கடந்த 2017-ம் ஆண்டு 301 உயிரிழப்பு வழக்குகள், 2018-ம் ஆண்டு 149 உயிரிழப்பு வழக்குகள், 2019-ம் ஆண்டு 125 உயிரிழப்பு வழக்குகள், 2020-ம் ஆண்டு 65 உயிரிழப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு குறைந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை, நடப்பாண்டு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘மாநகரில் நடப்பாண்டு ஜனவரியில் 6, பிப்ரவரியில் 5, மார்ச்சில் 10, நடப்பு மாதத்தில் 6 என 27 உயிரிழப்பு விபத்துகள் இதுவரை நடந்துள்ளன. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே, கடந்தாண்டு ஜனவரியில் 8, பிப்ரவரியில் 4, மார்ச்சில் 7, ஏப்ரலில் ஒரு உயிரிழப்பு விபத்து மட்டுமே நடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்தாண்டு 65 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன. ஆனால், நடப்பாண்டு 4 மாதங்களில் 27 உயிரிழப்பு விபத்துகள் நடந்துள்ளன. வாகன ஓட்டுநர்களால், சாலை போக்குவரத்து விதிகள் மீறப்படுவது விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. அதேசமயம், சாலைகள் பழுது, சில இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் இருத்தல் போன்றவையும் விபத்துகளுக்கு காரணமாக உள்ளன,’’ என்றார்.

கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘நேரடியாக போக்குவரத்துக் காவல்துறையினர், போலீஸ் மின்னணு கண் செயலி, பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்புக் கேமராக்கள் என 3 வகைகளில் விதிமீறல் வாகன ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை 3,76,341 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுவே, கடந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை 2,70,309 வழக்குகள் மட்டுமே பதியப்பட்டிருந்தன. போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு, நடப்பாண்டு ரூ.4.98 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு விபத்துகளை குறைக்க, போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டுநர்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x