Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

கோவில்பட்டி சொர்ணமலை மலையில் 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் மலைப்பகுதியில் ரூ.12.32 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பொழுது போக்கு பூங்கா பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் 4 ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட சொர்ணமலை கதிர் வேல்முருகன் கோயில் கதிரேசன் மலையில் அமைந்துள்ளது. கோயிலில் மாதாந்திர கார்த்திகை, சஷ்டி மற்றும் திருக்கார்த்திகை பண்டிகை, மார்கழி மாத பூஜைகள், பங்குனி உத்திர பூஜைகள்நடந்து வருகின்றன. விழாக்காலங்களில் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், மலை மீது கோயில் அமைந்துள்ளதால், உள்ளூர் மக்கள் மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் இங்குகுடும்பத்துடன் வருவது வழக்கம்.

இதனால், மலைப்பகுதியில் சிறுவர் பொழுது போக்கு பூங்காவும், சுகாதார வளாகமும் அமைக்கவேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தன்னிறைவு திட்டத்தில், ரூ.12.32 லட்சத்தில் 2012-13-ம் ஆண்டில் கோயிலுக்கு செல்லும் வழியில் 80 மீட்டர் நீளம், 21 மீட்டர் அகலத்தில் மலை மீது சிறுவர் பொழுது போக்கு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் 2016-17-ம் ஆண்டு நிறைவு பெற்றது.

பூங்காவில் சிறுவர் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவுக்குள் நடந்து செல்ல கற்களாலான நடைபாதையும் உள்ளது. மாலையில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருவோர், பூங்காவில் இளைப்பாறி விட்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பூங்கா திறக்கப்படாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. சாலையில் இருந்து பூங்காவுக்கு செல்லசரியான பாதை அமைக்கப்படவில்லை. ரூ.12.32 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாட்டுக்கு விடாமல் காட்சிப்பொருளாக உள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், தன்னிறைவு திட்டத்தில் ரூ.16.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகமும் திறக்கப்படவில்லை. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாபயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில், சொர்ணமலை கோயில் வளாகத்தில் 135 அடி உயர முருகன் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும்அதிகரிக்கும். அப்போது பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை பயன்பாட்டில் இருந்தால் கோயிலுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, பூங்காவை திறந்துமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும். போதுமான பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். முருகன் சிலை அமைத்து இப்பகுதியை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x