Published : 27 Apr 2021 05:28 AM
Last Updated : 27 Apr 2021 05:28 AM

அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் கோயில் வளாகத்திலேயே இன்று ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று எதிர்சேவையின்போது கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்.

மதுரை

அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் எதிர்சேவை நேற்று நடந்தது. கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெறுகிறது.

அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் தங்கக் குதிரையில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியமானது. அப்போது வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்பர்.

தற்போது கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக திருவிழாக்களை கோயில் வளாகத்தில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய விழாக்கள், பூஜைகள் ஆகமவிதிப்படி கோயில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

அதன்படி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி சுவாமி புறப்பாடுடன் தொடங்கியது. இரண்டு, மூன்றாம் நாள் சுவாமி புறப்பாடு திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. நான்காம் நாளான நேற்று கள்ளழகர் திருக்கோலத்தில் சுந்தரராஜப் பெருமாள் எதிர்சேவை நடந்தது.

அதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோயில் வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதில் கள்ளழகர் இன்று காலை 9 மணி அளவில் இறங்குகிறார்.

பக்தர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு தரிசிக்கும் வகையில் www.tnhrce.gov.in அல்லது www.alagarkoil.org என்கிற இணையதளத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று எதிர்சேவையின்போது கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x