Published : 26 Apr 2021 04:20 PM
Last Updated : 26 Apr 2021 04:20 PM

பிரசவித்த பெண்ணை வீல் சேரிலிருந்து கீழே தள்ளிய ஊழியர்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை

பிரசவித்த பெண்ணை வீல் சேரில் இருந்து மருத்துவமனை ஊழியர், கீழே தள்ளிய விவகாரத்தை தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் தமிழக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் தேவங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன், ராதா தம்பதி. இவர்கள மகள் முருகவள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான முருகவள்ளி பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சுகப்பிரசவம் முடியாத காரணத்தால் ஏப் 19 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. கரோனா பரிசோதனை முடிவு வராததால் அவரை கரோனா வார்டில் அனுமதித்திருந்தனர், பின்னர் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்ததால் அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற தந்தை முருகேசன் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற வீல் சேரில் அழைத்துச் சென்ற மருத்துவமனை பெண் ஊழியர் ஆண் குழந்தை பிறந்திருப்பதால் பணம் தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை, இல்லாத கொடுமையால் தான் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளேன் என முருகவள்ளி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் பணம் இல்லாமல் ஏன் வருகிறாய் என முருகவள்ளியை அவதூறாகப் பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் திடீரென வீல் சேரில் இருந்து முருகவள்ளியை தள்ளிவிட்டுள்ளார். பிரசவித்த பெண்ணை மருத்துவமனையின் பெண் ஊழியர் கீழே தள்ளியதைப் பார்த்த அங்குள்ளவர்கள் பெண் ஊழியரைக் கண்டித்துள்ளனர். சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த பெண்ணை இரக்கமில்லாமல் பெண் ஊழியர் வீல் சேரிலிருந்து கீழே தள்ளும் காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலானது.

இந்தச் செய்தி பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை இயக்குனர், நாகை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஆகியோர் இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x