Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மணமக்கள் உட்பட 10 பேருக்கு மட்டுமே அனுமதி: திருமணத்துக்கு வந்த உறவினர்கள் வேதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு நேற்று திரண்ட மணமக்களின் உறவினர்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடைபெற்ற திருமணங்களில் மணமக்கள் உட்பட 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் உறவினர்கள் வேதனையடைந்தனர்.

கரோனா தொற்று பரவலால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது எனவும், வழக்கமான பூஜைகள் செய்ய தடை இல்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த 12 மணமக்கள், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை திரண்டனர். ராஜகோபுரம் வழியாக கோயில் உள்ளே செல்ல முயன்றவர்களை பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, இரும்பு கதவை மூடினர்.

கோயில் உள்ளே கூட்டமாக அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால், கோயில் ஊழியர்களுக்கும், திருமணத்துக்கு முன் பதிவு செய்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கோயில் உள்ளே சென்று திருமணம் செய்து கொள்ள மணமக்கள் உட்பட 10 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்க மறுத்த மணமக்களின் உறவினர்கள், திருமண நிகழ்ச்சிக்கு 50 பேரை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த உத்தரவை பின்பற்றி 50 பேரை அனுமதிக்க வேண்டும் என்றனர். அவர்களது கருத்தை ஏற்க மறுத்த கோயில் நிர்வாகம், எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட வழி காட்டுதலின்படியே செயல்படுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

25 பேரை அனுமதியுங்கள்

இதனால் வேறு வழியின்றி, ஒவ்வொரு மணமக்களுடன் அவர்களது பெற்றோர் உட்பட முக்கிய நபர்கள் மட்டும், கோயில் உள்ளே சென்று திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இதுகுறித்து மணமக்களின் உறவினர்கள் கூறும்போது, “மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என கணக்கீட்டால் 6 பேர் வந்துவிடும். மீதமுள்ள 4 பேரில், நாங்கள் யாரை தேர்வு செய்வது. கோயில்களில் நடைபெறும் திருமணங்களில், அரசு அறிவித்துள்ளபடி 50 பேரை அனுமதிக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 25 பேரையாவது அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x