'18 வயது முதல் இலவசத் தடுப்பூசி' கோரிக்கை: புதுவையில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

'18 வயது முதல் இலவசத் தடுப்பூசி' கோரிக்கை: புதுவையில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

18 வயது முதல் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைப் பதாகையுடன் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (ஏப். 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

''கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க பி.எம். கேர் நிதியில் இருந்து 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். வெளிச் சந்தையில் தடுப்பூசியை விற்பதற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்குவதைத் திரும்பப் பெற வேண்டும்.

வாழ்வாதாரத்தை இழந்துள்ள முறைசாரா, ஆட்டோ, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் அறிவிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை இலவசமாக நியாயவிலைக் கடைகள் மூலம் உடனடியாக வழங்க வேண்டும்'' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் இன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் கோரிக்கைப் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசத்துக்கு உட்பட்ட புதுச்சேரி நகரம், உழவர்கரை நகர கமிட்டி, வில்லியனூர், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு ஆகிய கொம்யூன் கட்டிகளுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கோரிக்கைப் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், புதுச்சேரி நகரக் குழுச் செயலாளர் மதிவாணன், இடைகுழுச் செயலாளர்கள் செயற்குழு, பிரதேசக் குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in