Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை நிறுத்த எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கடைக்காரர்கள் கைது

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை நிறுத்திய மாநகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட, கடைக்காரர்கள் மற்றும் மீனவ அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மெரினா கடற்கரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடைகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கு குற்றச் செயல்கள் அதிகரிப்பது, அசுத்தமாக இருப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்ட நிலையில், கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்த அதன் பரப்பு மற்றும் கொள்திறன் அடிப்படையில் 900 கடைகளை மட்டும் அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்தது.

மெரினாவில் நகராட்சியால் வழங்கப்படும் ஸ்மார்ட் வண்டி கடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் ஏற்கெனவே கடைகளை வைத்திருந்த, மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட கடைக்காரர்களுக்கு 60 சதவீதம் (540 ) கடைகள், மெரினாவில் கடை நடத்தாத, பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 40 சதவீதம் (360) கடைகள் ஒதுக்க மாநகராட்சி முடிவு செய்தது. மெரினாவில் கடை வைக்க விருப்பம் தெரிவித்து 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்பித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதி முன்னிலையில் குலுக்கல் முறையில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் சில ஸ்மார்ட் வண்டிகளை மெரினா கடற்கரையில் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முயன்றுள்ளனர். அதைக் கண்டித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் மற்றும் மீனவ அமைப்பினர் கலங்கரை விளக்கம் "அருகே காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை கடைக்காரர்கள் மற்றும் மீனவர்கள் கைவிட மறுத்ததால், சுமார் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மெரினா கடற்கரை வியாபாரிகள் கூறியதாவது:

இந்த கடற்கரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகிறோம். இதில் 900 "பேருக்கு மட்டுமே அனுமதி, அதிலும் 360 பேர் மெரினா அல்லாத பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற மாநகராட்சியின் முடிவை தொடர்ந்து எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்காத நிலையில், கரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதித்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு வந்து மெரினாவில் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், எங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த நிலையில், எங்களை கைது செய்தார்கள் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x