Last Updated : 23 Apr, 2021 03:16 AM

 

Published : 23 Apr 2021 03:16 AM
Last Updated : 23 Apr 2021 03:16 AM

குமரியில் பாசனக் கால்வாய்களை தூர் வார மதிப்பீடு தயார் செய்வதில் தாமதம்: கன்னிப்பூ சாகுபடிக்கு நீர் விநியோகம் பாதிக்கும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பொருட்டு நீர்நிலைகளை ஆய்வு செய்து, மதிப்பீட்டு பணிகளை இதுவரை தொடங்காததால் கன்னிப்பூ சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம்முழுவதும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2,040 பாசனக் குளங்கள், 700 கிலோமீட்டர் தூரம் பிரதான பாசனக் கால்வாய், 2000 கிலோ மீட்டர் தூரம்வரையுள்ள கிளை கால்வாய்கள் மற்றும் பிற கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதற்குஆண்டுதோறும் பொதுப்பணித்துறைக்கு அரசு ரூ.4.5 கோடி வரை நிதியுதவி வழங்குகிறது.

இந்த நிதியின் மூலம் அனைத்து கால்வாய்கள், குளங்கள், அணைகளை பராமரிக்கும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், பிரதான பகுதிகளில் உள்ள கால்வாய், மற்றும் ஓடைகளில் தண்ணீர் செல்லும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சீரமைக்கப்படும். ஜூன் மாதம் கன்னிப்பூ நடவுப் பணிகள் பரவலாக தொடங்கப்பட்டு விடும் என்பதால் மே மாதம் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்குவர்.

இதற்காக நீர்நிலைகளை பொதுப்பணித்துறை பொறியாளர் குழுவினர் முழுமையாக ஆய்வு செய்து, மதிப்பீடு தயாரித்து பணி அனுமதியை ஏப்ரல் மாதமே பெறுவது வழக்கம்.

ஆய்வுப்பணி தாமதம்

இப்பணியில் கடந்த 4 ஆண்டுகளாகவே தொய்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் மே மாத இறுதியில் அவசர, அவசரமாக கால்வாய்களை தூர்வார ஆரம்பித்து, ஜூன் மாதம் மழைக்காலத்தில் பணிகள் அரைகுறையாக முடிந்த நிலையில் தண்ணீர் திறந்து விடுவதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, 2, பொய்கை, மாம்பழத்துறையாறு அணைகளை மூடிஒருமாதம் ஆன பின்னரும்இதுவரை பராமரிப்பு மேற்கொள்ள பொதுப்பணித்துறையினர் ஆய்வுப்பணி கூடசெய்யவில்லை. இதனால் மதிப்பீடுதயாரிக்கும் பணி அடுத்த மாதம் தான் தொடங்கப்படும் சூழல் உள்ளது.

கால்வாய்களில் மண்திட்டுகள் அதிகரித்து அடர்ந்த செடிகளும், புற்களும் நிறைந்துள்ள நிலையில் தூர்வாராமல் தண்ணீர் விடும்போது பாதியளவு தண்ணீர் கூட பாசன நிலங்களுக்கு கிடைக்காத சூழல் ஏற்படும்.

இதுகுறித்து குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறும்போது,

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக இன்னும் ஒரு வாரத்தில் குளத்துப்பாசன பகுதிகளில் நாற்றங்காலுக்கான விதைநெல் பாவும் பணி தொடங்கவுள்ளது. அணைகளில் போதிய தண்ணீர் கையிருப்பு உள்ளதால் சாகுபடி பணியை தொடங்க விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், நெல் சாகுபடியை வீழ்ச்சியடையச் செய்யும் வகையில் பொதுப்பணித்துறையின் செயல்பாடு உள்ளது.

பாசன நீர் வீணாகும்

பாசனக் கால்வாய்களை தூர்வார ஆய்வு மேற்கொண்டு மதிப்பீடு தயார் செய்யும் பணி தொடங்கப்படவில்லை. பாசன கால்வாய்களை தூர்வாராமல் இழுத்தடித்து பின்னர் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கால்வாய்களை தூர்வாராவிட்டால் தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு வந்து சேராது. பல இடங்களில் கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் கசிவு ஏற்பட்டு பாதிக்கும் மேற்பட்ட பாசனநீர் வீணாகும்.

எனவே, தூர்வாராமல் பாசனநீர் விநியோகத்தை விவசாயிகள் அனுமதிக்க மாட்டோம். பாசனகால்வாய்கள் மற்றும் குளங்களை மே மாத இறுதிக்குள் தூர்வாரி சீரமைத்த பின்னரே தண்ணீர்விடுவதற்கு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை நீராதார துறையினர் கூறும்போது, ‘‘தேர்தல் பணியால் பாசனக் கால்வாய்களை தூர்வாருவதற்கான அடிப்படை பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தூர் வாருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x