Last Updated : 20 Apr, 2021 06:36 PM

 

Published : 20 Apr 2021 06:36 PM
Last Updated : 20 Apr 2021 06:36 PM

கரோனாவைக் கட்டுப்படுத்த இரவு 7 மணிக்குள் கடைகள் மூடப்படும்: திருப்பத்தூர் மாவட்ட வியாபாரிகள் அறிவிப்பு

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் இரவு 7 மணிக்குள் மூடப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று (ஏப். 20) 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஒருநாள் அதிக பாதிப்பு இதுவே ஆகும். இதனால், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, ஏப்ரல் 20-ம் தேதி முதல் (இன்று) இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபார சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், வணிகர் சங்கம், நகை வியாபாரிகள், மளிகை வியாபாரிகள் சங்கத்தினர், உணவக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோனைக் கூட்டம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது. திருப்பத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசகம் தலைமை வகித்தார்.

இதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்குள் அனைத்துக் கடைகளையும் மூடுவது, நோய்த்தொற்று அதிகரித்தால் எதிர்காலங்களில் மாலை 5 மணியுடன் கடைகளை மூடுவது, கடை திறந்திருக்கும்போது அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது, கடை ஊழியர்கள் முதல் வாடிக்கையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதை உறுதி செய்வது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.

அதேபோல, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வாணியம்பாடியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவை வார நாட்களில் இரவு 8 மணிக்குள் மூடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல, வாணியம்பாடி தினசரி காய்கறி சந்தை கூடுதல் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்வது, ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால் வாணியம்பாடியில் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளைத் திறப்பதில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள், அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும், ஆம்பூர் பாங்கி மார்க்கெட்டுக்கு வெளியே கடைகளைத் திறப்பது என்றும், வார நாட்களில் இரவு 8 மணிக்கு முன்பாகக் கடைகள் மூடப்படும் என்றும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x