Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

இரவு நேர ஊரடங்கின்போது சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை: மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தகவல்

சென்னையில் இரவு நேர ஊரடங்கின் போது 200 இடங்களில் வாகன சோதனை நடைபெறும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிலும் இதே அளவில் வாகன சோதனை நடத்தப்படும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் போலீஸார் மற்றும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காவல் சிறார் சிறுமியர் குழும மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘`கரோனா தடுப்பு விதிகளை பொது மக்கள் மட்டும் அல்ல காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பின்பற்ற வேண்டும். கரோனாவால் காவல் துறையினர் உயிரிழப்பது வேதனையளிக்கிறது. சென்னைக்கு பாதுகாப்பு வழங்குவது போலீஸாராகிய நமது கடமை. அதேபோல் நமது உடல் நிலையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சென்னையில் சுமார் 10,200 போலீஸார் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் 12 ஆயிரம் போலீஸாருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவலர் குடும்பத்தினருக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேர ஊரடங்கின் போது 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும். முழு நேர ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையிலும் அதே அளவு சோதனை நடத்தப்படும். கரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கின்போது மருத்துவ காரணங்களுக்காக வாகனங்களில் செல்பவர்கள் அதற்கான காரணம் மற்றும் சான்றுகளை காண்பித்து விட்டு செல்லலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையடுத்து சனிக்கிழமைகளில் கடை வீதிகள், சந்தைகளில் அதிக கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தடுப்பூசி தொடர்பாக அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர்அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் 2 முதல் 5 சதவீதம் மட்டுமே பழுதடைந்திருக்கலாம். அதுவும் விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் காவல் கூடுதல் ஆணையர் செந்தில்குமார், இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x