Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

கரோனா விதிமீறல் தொடர்பாக முக்கிய சாலைகள் மட்டுமின்றி தெருக்களிலும் கண்காணிப்பை அதிகப்படுத்த காவல் ஆணையர் உத்தரவு

சென்னை

முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் என கரோனா விதிமீறல் தொடர்பான கண்காணிப்பை, முக்கிய சாலைகள் மட்டுமின்றி தெருக்களிலும் மேற்கொள்ள வேண்டும் என ரோந்து போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறையினருடன் இணைந்து முன்களப் பணியாளர்களாக சென்னை போலீஸாரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கரோனா கால விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.

அதன்படி சென்னையில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக கடந்த 8-ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 10,502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.20 லட்சத்து 54 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42,100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதது தொடர்பாக கடந்த 17-ம் தேதி மட்டும் 1,601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரோந்து போலீஸார் முக்கிய சாலைகளில் மட்டுமின்றி, தெருக்கள்தோறும் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி முகக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து வலியுறுத்துவதோடு விதி மீறலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x