Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

அப்துல் கலாமின் நெருங்கிய நண்பர், மாணவராக திகழ்ந்த விவேக்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிறந்த மாணவராக, நண்பராக நடிகர் விவேக்திகழ்ந்ததாக கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றியவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவருமான பொன்ராஜ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கம் கிடையாது. விவேக் தனது திரைப்படங்களில் கலாமை குறிப்பிட்டு பேசுவதை நான் அவரிடம் கூறுவேன். ‘அப்படியா!’ என்று கேட்டு சிரிப்பார். அப்படிதான் விவேக்கை கலாமுக்கு தெரியும்.

டெல்லியில் பத்மஸ்ரீ விருது வாங்கியதும் கலாமிடம் ஆசி வாங்க விவேக் வந்தார். அப்போதுதான் இருவருக்கும் முதல் அறிமுகம்.

இதைத் தொடர்ந்து, கலாமின் சிறந்த மாணவராக, நண்பராக விவேக் திகழ்ந்தார்.

‘மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற கருத்தை திரைப்படங்கள் வழியாக கூறுங்களேன்’ என்று விவேக்கிடம் கலாம் கூறினார். இதனால், மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கலாமின் லட்சியத்தை விவேக் தனது கனவாகவே எடுத்து செய்தார்.

அப்போது பிறந்ததுதான் ‘பசுமைக் கலாம்’. அவர் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டதும், கடலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விவேக்கை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் கலாம். தொடர்ந்து அப்பணியில் விவேக் சிறப்பாக ஈடுபட்டு வந்தார். அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x