Last Updated : 22 Dec, 2015 08:26 AM

 

Published : 22 Dec 2015 08:26 AM
Last Updated : 22 Dec 2015 08:26 AM

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாஜக மாநில தலைவர் தேர்தல்?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பாஜக மாநிலத் தலைவர் தேர்தலை நடத்த அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக கட்சி விதிகளின்படி கிளை கமிட்டி முதல் அகில இந்திய தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

2009, 2012-ல் நடந்த தேர்தல்களில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மக் களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மத்திய அமைச்சர் ஆனதால் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக் கப்பட்டார்.

தேர்தல் நடந்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் பாஜக உள்கட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. கிளை, நகர, ஒன்றிய அளவில் தேர்தல் தொடங்கிய நிலையில் கனமழையால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. திட்டமிட்டபடி டிசம்பர் இறுதிக்குள் மாநிலத் தலைவருக்கான தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலத் தலைவர் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்களுடன் கடந்த 15-ம் தேதி டெல்லியில் அமித்ஷா ஆலோசனை நடத்தி னார். மாநிலத் தலைவர் தேர்வு குறித்து ஒவ்வொருவரின் கருத் தையும் கேட்டறிந்ததாக கூறப் படுகிறது.

கடும் போட்டி

பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் மாநிலத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய தலைவர் தமிழிசை, தான் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இடைக்காலமாக பதவியில் இருந்துள்ளதால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். எச்.ராஜா, எஸ்.மோகன்ராஜுலு, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மாநிலத் தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.

கேரளத்தில் மாநிலத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியரான கும்மணம் ராஜசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுபோல தமிழகத்திலும் நடந்துவிடக் கூடாது என்ற அச்சம் தமிழக தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு மாநிலத் தலைவரை மாற்றினால் தேவை யில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் தமிழிசை சவுந்தர ராஜனே மீண்டும் தேர்ந்தெடுக் கப்படுவார் என்றும் பாஜகவில் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக் கான தேதி பிப்ரவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்பதால் மாநிலத் தலைவர் தேர்தலை பொங்கல் பண்டிகைக்கு முன்ன தாக நடத்தி முடிக்க வேண்டும் அல்லது பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடத்த வேண்டும் என்ற முடிவில் பாஜக மேலிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக தலைவர்கள் அனை வரும் ஒற்றுமையுடன் இருந்து 2014 தேர்தலைப்போல 3-வது அணியை உருவாக்க வேண்டும் என அமித்ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளனர். இந்தச் சூழலில் புதிய மாநிலத் தலைவர் தேர்வு தொடர்பான பேச்சு தொடங்கியுள்ளதால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் திட்டமிட்டபடி டிசம்பர் இறுதிக்குள் மாநிலத் தலைவருக்கான தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x