Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை கொட்டி கட்டிய தடுப்பணைகள்: வைகையில் கழிவுநீர் தேங்குவதால் பரவும் தொற்று நோய்

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை கொட்டி வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டிய 21 கோடி ரூபாய் வீணாகியுள்ளது. தற் போது அந்த தடுப்பணைகளில் கழிவு நீர் மட்டுமே தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடாவிட்டாலும் ஆங்காங்கே ஆற்று வழித்தடத்தில் இணையும் கிளை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் ஆற்றில் கலந்து ஆண்டு முழுவதும் வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படும். அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் இரு கரைகளையும் தொட்டபடி வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும்.

காலப்போக்கில் ஆற்று வழித்தடத்தில் உள்ள கிளை நதிகள் மாயமானதோடு வைகை ஆற்றின் மணலும் பெருமளவு கொள்ளை போனதால் வைகை ஆறு வறட்சிக்கு இலக் காக தொடங்கியது.

அதனால் சமீப காலமாக வைகை அணை யில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படுகிறது. மற்ற நாட்களில் வைகை ஆற்றில் கழிவு நீர் மட்டுமே சிறு நீரோடைபோல் ஓடுகிறது.

ரூ.21 கோடியில் தடுப்பணை

இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரை நகர் பகுதி வைகை ஆற்றில் ஆண்டு முழுவதுமே நீரோட்டம் காணப்படுவதற்கும், தண்ணீரை தேக்கி நகர்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இரண்டு தடுப் பணைகள் கட்டப்பட்டன. ஏவி மேம்பாலம் அருகே ஒரு தடுப்பணையும், ஒபுளா படித் துறை அருகே மற்றொரு தடுப்பணையும் ரூ.21 கோடியில் கட்டப்பட்டன.

தடுப்பணை கட்ட 2 ஆண்டுகளாகி விட்டது. இதுவரை இந்த தடுப்பணையால் வைகை ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைக்கவும் முடியவில்லை.

அதன் மூலம் நகரில் ஆண்டு முழு வதும் வைகை ஆற்றில் நீரோட்டத்தை பராமரிக்கவும் முடியவில்லை. தற்போது வரை தடுப்பணைகளில் ஆங்காங்கே நகர் பகுதியில் திறந்துவிடப்படும் கழிவு நீரை மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. அதில் கொசுகள் உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவுகிறது.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது மட்டும் தடுப்பணைகளில் தண்ணீர் ஒரளவு தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரையும் உடனடியாக அதிகாரிகள் திறந்துவிட்டு விடுகின்றனர்.

அதனால் எந்த நோக்கத்துக்காக வைகை ஆற்றில் ரூ.21 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை கொட்டி தடுப்பணையை மாநகராட்சி கட்டியதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது.

இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தடுப்பணைகள் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ளன. ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்போது தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கி தெப்பக்குளத்துக்கு திருப்பி விடப் படுகிறது. மற்ற நாட்களில் தண்ணீரை தேக்கினால் சாக்கடை நீர் தேங்கிவிடும் என்பதால் திறந்து விட்டுவிடுகின்றனர்.

இன்னும் தடுப்பணைகள் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளும் நிறைவடையவில்லை. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பிறகு தடுப்பணைகளால் மதுரைக்கு பலன் கிடை க்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x