Published : 17 Apr 2021 03:14 AM
Last Updated : 17 Apr 2021 03:14 AM

ஈஷா உதவியால் ரூ.64 லட்சம் வருவாய் ஈட்டிய பழங்குடியின பெண்கள்

கோவை

ஈஷா அறக்கட்டளையின் உதவியாக பழங்குடியினப் பெண்கள் ரூ.64 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளனர்.

கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என பல்வேறு வழிகளில் ஈஷா உதவி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈஷாவுக்கு அருகே உள்ள தாணிகண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 11 பழங்குடியின பெண்களை ஒன்றிணைத்து ‘செல்லமாரியம்மன் பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழு’ கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவர்களுக்கென்று தனியாக, ஆதியோகி அருகில் ஒரு பெட்டிக் கடையும், ஒரு பேட்டரி வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது.

சில நூறு ரூபாய் முதலீட்டில் தங்களது சுய தொழிலை தொடங்கிய அவர்கள் வெறும் மூன்றே ஆண்டுகளில் ரூ.64 லட்சம் மொத்த வரவு செய்து சாதனை படைத்துள்ளனர். அத்துடன் ரூ.23 லட்சம் லாபமும் ஈட்டியுள்ளனர். அதில் ரூ.6 லட்சம் முதலீட்டில் புதிதாக ஒரு பேட்டரி வண்டியையும் வாங்கியுள்ளனர். ஆதியோகியில் இருந்து சர்பவாசல் வரை பொதுமக்களை அழைத்து செல்வதற்காக இந்த வண்டியை பயன்படுத்துகின்றனர். 10 பேர் அமரும் திறன் கொண்ட அந்த வண்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கின்றனர். அந்த வண்டிக்கு ஈஷாவிலேயே தினமும் இலவசமாக சார்ஜ் போட்டு கொள்கின்றனர். ஏதேனும் சிறு பழுது ஏற்பட்டாலும் கட்டணமின்றி சரி செய்து கொள்கின்றனர். அதேபோல், பெட்டி கடையில் டீ, காபி, குளிர் பானங்கள் மற்றும் சிற்றுண்டி உணவுகள் போன்றவற்றை விற்பனை செய்தும் லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னர், தினக் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு கொண்டு இருந்த பழங்குடி பெண்கள், ஈஷாவின் உதவியால் இப்போது சுய தொழில் செய்து சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். மேலும், ஈட்டிய லாபத்தில் குடும்பத்தை நன்றாக நிர்வகிக்கும் அவர்கள் வீட்டுக்கு தேவையான மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் மற்றும் பேருந்து வசதியற்ற தங்கள் கிராமத்துக்கு எளிதில் சென்று வருவதற்கு வசதியாக பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் வாங்கியுள்ளனர்.

குறிப்பாக, கரோனா ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் கடை நடத்த முடியவில்லை. அப்போது அவர்கள் வங்கியில் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொகையைக் கொண்டு குடும்பத்தை நிர்வகித்தனர். அந்த பழங்குடியின பெண்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் ஆரம்பம் முதல் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x