Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் 92-வது வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு: அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வீடுவீடாக பிரச்சாரம்

சென்னை

வேளச்சேரியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் 92-வது எண் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதியில் சீதாராம் நகர், டிஏவி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 92-ல் இருந்து 2 மின்னணு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரத்தை அதற்குரிய வழிமுறைகள்படி அல்லாமல் இருசக்கர வாகனத்தில் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை எடுத்துச் சென்றவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அதில் விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர்.

இதன் அடிப்படையில், அந்த வாக்குச்சாவடியில் மட்டும் நாளை (ஏப்.17-ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தொடர்ந்து, மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மேற்கொண்டார். ஆண்களுக்கான வாக்குச்சாவடியான இதில், 548 ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, நேற்று அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட 12 கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 23 வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் வாக்கு சேகரித்த நிலையில், அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் வாக்கு சேகரித்ததாக சர்ச்சை ஏற்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுவீடாகச் சென்று வாக்கு கோரித்தனர். இதுதவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீர்த்தனா உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர். நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட நேரம் வரை வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. தற்போதுள்ள 548 வாக்காளர்களில் ஏற்கெனவே தபால் வாக்கு அளித்தவர்களுக்கு மறு வாக்குப்பதிவிலும் வாக்கு அளிக்கப்படாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் இந்த வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x